வங்கிகளின் வாராக் கடன்களைத் தீர்க்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்பட்ட ‘எஃப்ஆர்டிஐ’ மசோதாவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்த நிலையில், கடன்களை அடைக்க வங்கிக்கு ‘உள்ளே கிடைக்கும்’ நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தும் உட்பிரிவு இந்த மசோதாவில் இடம்பெற்றிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வங்கிகளில் பணத்தைப் போட்டுவைத்திருக்கும் டெபாசிட்தாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இம்மசோதா திரும்பப் பெறப்படும் நிலையில், இந்தக் குழப்பங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன.
வங்கிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டால், ‘தனக்குக் கடன் தருபவரின் பணத்தையோ, டெபாசிட்தாரர்கள் தன்னிடம் அளித்துள்ள பணத்தின் ஒரு பகுதியையோ எடுத்து நெருக்கடியைச் சமாளிக்கலாம்’ என்று நிர்வாக நடைமுறை அனுமதிக்கிறது. இந்நிலையில், இந்த மசோதாவில் இருந்த, ‘நெருக்கடியிலிருந்து மீள உதவும்’ ஒரு சிறு பிரிவு கலக்கத்தை ஏற்படுத்தியது. வங்கிகளின் நிர்வாகக் குறைபாடுகளுக்கு வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்து இட்டு நிரப்புவதா என்ற கேள்வியும் எழுந்தது. வங்கியில் டெபாசிட் செய்த பலர் பணத்தைத் திரும்பப் பெற்றனர். புதிய டெபாசிட்களைத் திரட்டுவதும் கடினமாகிவிட்டது.
வங்கிகள் தரும் வட்டிவீதம் குறைவாக இருந்தாலும் அசலாவது தங்கட்டுமே என்ற நோக்கில் ஏராளமான முதியவர்கள், ஓய்வூதியதாரர்கள் அரசுத் துறை வங்கிகளில் டெபாசிட் செய்துவருகிறார்கள். இந்நிலையில், மக்கள் மத்தியில் இப்படியான பதற்றம் எழுவது இயல்பானதுதான். டெபாசிட்களில் அரசு கைவைக்காது என்று பல முறை விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் மக்களிடம் அச்சம் நீங்கவில்லை. எனவே, இந்த மசோதாவைத் திரும்பப் பெறுவது என்ற முடிவை அரசு எடுத்திருக்கிறது. நிதித் துறையைத் தற்காலிகமாகக் கையாளும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் இம்முடிவைத் தெரிவித்திருக்கிறார்.
எஃப்ஆர்டிஐ மசோதாவைத் திரும்பப் பெறும் அதே சமயம், நிதி நிறுவனங்கள் நொடித்துப்போனால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நல்ல கட்டமைப்பையும் அரசு உருவாக்க வேண்டும். ‘நிதிநிலையில் நொடிப்பு திவால் நிலை அறிவிப்பு’ ஆகியவற்றுக்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான சட்டம் எந்த அளவுக்குச் செயல்படுகிறது என்றும் ஆராய வேண்டும். ‘டெபாசிட் இன்சூரன்ஸ், கடன் உறுதி கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பை வலுப்படுத்த வேண்டும். 1960-களில் இரண்டு வங்கிகள் நொடித்த பிறகு இந்த கார்ப்பரேஷன் ஏற்படுத்தப்பட்டது. டெபாசிட்தாரர்கள் ரூ.1 லட்சத்துக்கும் மேல் வங்கியில் எவ்வளவு வைத்திருந்தாலும், வங்கி திவாலாகும் நிலையில், குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்தை டெபாசிட்தாரர்களுக்குத் திரும்ப வழங்க இந்த கார்ப்பரேஷன் நிறுவப்பட்டது. வாராக் கடன்களால் மட்டுமல்ல, மோசடியாகக் கடன்பெறுவது அதிகரித்திருப்பதாலும் அரசுத் துறை வங்கிகள் திணறுகின்றன. இந்நிலையில், வங்கிகள் நிதி நெருக்கடிகளில் சிக்கிக்கொள்ளாத வகையிலான நடைமுறைகளை அரசு உறுதிசெய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வங்கிகள் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும்!