தலையங்கம்

மருத்துவமனை வாசலிலிருந்து அகலுமா ஊடக வாகனங்கள்?

செய்திப்பிரிவு

உயிருக்குப் போராடும் சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை சற்று மேம்பட்டிருக்கிறது. சென்னையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனையை ஒட்டியுள்ள சாலையில் கடந்த சில நாட்களாகக் குவிந்திருக்கும் திமுக தொண்டர்களை வீடு திரும்புமாறு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

முதலில் அங்கு முற்றுகையிட்டிருக்கும் 24 மணி நேரச் செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களின் நேரடி ஒளிபரப்பு வாகனங்கள் அங்கிருந்து அகலுவது நல்லது எனத் தோன்றுகிறது.

நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தின் நீண்ட நாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலை குறித்த எந்தச் செய்தியும் அகில இந்திய அளவிலான செய்தி. அதில் ஒவ்வொரு ஊடக நிறுவனமும் எடுத்துக்கொள்ளக் கூடிய அக்கறை இயல்பானதே. ஆனால், செய்திகளை முந்தித் தருவதில் உண்டாகியிருக்கும் போட்டியும் பார்வையாளர்களை வசப்படுத்துவதில் இருக்கிற ஆர்வமும் உருவாக்கிவரும் பதற்றச் சூழல்தான் கவலையை அதிகரிக்கிறது.

தொலைக்காட்சிகள் உடனுக்குடன் ஊகமான தொனியில் செய்திகளை வெளியிடும்போது, அதன் அடிப்படையில் சமூக வலைதளங்களும், ‘வாட்ஸ்-அப்’ போன்ற செயலிகளும் வதந்திகளின் உற்பத்திக் கேந்திரமாக மாறுவது பெருங்கொடுமை.

எப்போதெல்லாம் தொலைக்காட்சி சேனல்கள் கருணாநிதியின் உடல்நிலை குறித்த தொடர் பரபரப்பைக் கிளப்புகின்றனவோ, அதைத் தொடர்ந்து கடைகள், வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்ததையும் சீக்கிரமாகவே அவற்றை மூடிட வேண்டியிருந்ததையும் வணிகர்கள் தரப்பிலிருந்து அறிய முடிகிறது. தவிர, மக்களிடம் உண்டாக்கப்படும் தேவையற்ற பதற்றம் அவர்களுடைய அடுத்தடுத்த நாட்களின் திட்டங்களையும் குலைக்கிறது. சொல்லப்போனால், மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட நாள் முதலாக சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள், வெளியூர்களிலிருந்து சென்னை வரும் பயணிகள் எண்ணிக்கை சரிவு கண்டிருப்பதை அறிய முடிகிறது.

இத்தகைய ஊகச் செய்திகளுக்கும், நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு ஏற்படுத்துவதற்குமான தேவையே இல்லாத வகையில் கருணாநிதியின் உடல்நிலை நிலவரத்தை அவருடைய குடும்பத்தாரும் திமுகவும் வெளிப்படையாக அணுகிவருவதையும் கவனிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்ற ஊடகங்களின் ஆர்வமும் அதற்கான உழைப்பும் இயல்பானதுதான். அதேசமயம், ‘வாரம் முழுவதும் 24 மணி நேரமும்’ பரபரப்புச் செய்திகளை இடைவிடாமல் அளித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிக்கும்போதுதான் சிக்கலும் எழுகிறது.

ஒருகட்டத்தில் மக்களும் இந்த இடைவிடாத செய்தி போதைக்கு ஆளாகும்போதுதான், செய்தி என்ற பெயரில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் அளித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் தொலைக்காட்சிகளுக்கு ஏற்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, நாடெங்கிலும் வதந்திகளால் பெரும் கலவரங்களும், வன்முறைகளும் பெருகிவரும் இந்த சவாலான சூழலில், பாரம்பரிய ஊடக நிறுவனங்கள் முன்னைக் காட்டிலும் கூடுதல் பொறுப்புணர்வோடும், நம்பகத்தன்மையோடும் நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

SCROLL FOR NEXT