தலையங்கம்

ஒரே நேரத்தில் தேர்தல்: மத்திய அரசு கைவிட வேண்டிய கோரிக்கை

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலையும் மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசும் பாஜக தலைவர்களும் கோரிவந்த நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமற்றது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணான இந்தக் கோரிக்கையை, வலுவற்ற காரணங்களின் அடிப்படையில் வலியுறுத்திவரும் பாஜக தலைவர்கள் அதைக் கைவிட வேண்டும் என்பதை உணர்த்தும் சமிக்ஞை இது.

ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு எண்ணற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு ஒப்புகைச்சீட்டுப் பதிவு இயந்திரங்களும் தேவைப்படும். சட்டப்பேரவையின் கால அளவு குறித்து அரசியல் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவர வேண்டியிருக்கும் என்பதையும் ராவத் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

டிசம்பரில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுடன், மிசோரம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான தேர்தலை நடத்துவது குறித்த பரிசீலனைகளையும் நிராகரித்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை ஆதரிப்பவர்கள், ‘ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை என்று இல்லாமல், மாநில அரசுகளின் ஆட்சிக் காலத்துக்கேற்ப தேர்தல் நடத்துவதால் பெருமளவு செலவு ஏற்படுகிறது; தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வருவதால் புதிய திட்டங்களைக் கொண்டுவர முடிவதில்லை’ என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள்.

உண்மையில், எல்லா மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் மக்களவைத் தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சராசரியாக ரூ.8,000 கோடி மட்டுமே செலவாகிறது. இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டுக்கு இது பெரிய செலவு அல்ல.

மேலும், ஒரே சமயத்தில்தான் தேர்தல் என்பது நடைமுறைப் படுத்தப்பட்டு, ஒரு சட்ட மன்றம் கலைக்கப்பட்டுவிட்டால், ஆளுநர் ஆட்சி மூலம் மத்திய அரசின் வசம் அரசு நிர்வாகம் சென்றுவிடும்.

இது கூட்டாட்சித் தத்துவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்குப் பரவலான அரசியல் கருத்தொற்றுமையும் வெவ்வேறு மாநில, தேசியக் கட்சிகளின் சட்டபூர்வ ஒத்துழைப்பும் தேவைப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு 24 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். 12 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதற்கு ஈடான வாக்கு ஒப்புகைச்சீட்டுப் பதிவு இயந்திரங்களும் கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு பிரச்சினைகளையும் தீர்க்கும் பொருட்டு இந்தியாவுக்கு முன் இருக்கும் கேள்வி என்னவென்றால், தேர்ந்தெடுக்கப் பட்ட சட்ட மன்றங்களின் பதவிக்காலத்தை ஒரே நேரத் தேர்தல் என்பதற்காக இப்போது குறைக்க முற்பட்டால் அது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் அவமதிப்பதாகாதா?

ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த முற்பட்டால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள், சவால்களும் மிக அதிகம். எனவே, இந்த யோசனையைக் கைவிட்டுவிட்டு அடிப்படையான தேர்தல் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

SCROLL FOR NEXT