மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் கேரளத்துக்கு உதவ முன்வரும் வெளிநாடுகளின் நிதியைப் பெறுவது தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடு விவாதத்துக்குரியது. தற்போதைய கொள்கையின்படி, பேரிடர்களின்போது வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்பதில்லை என்றும், தேவையான உதவிகள் உள்நாட்டு முயற்சிகள் மூலம் நிறைவேற்றப்படும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். பேரிடரின்போது உதவி பெறுவது சகஜமாகயிருக்கும் நிலையில், நட்பு நாடுகளிடமிருந்து நீளும் உதவிக்கரங்களை மறுதலிப்பது ஆக்கபூர்வமான முடிவல்ல.
கேரளத்துக்கு நிதி உதவி வழங்க தாய்லாந்து, மாலத்தீவுகள் போன்ற நாடுகள் முன்வந்த நிலையில், வெள்ளப் பேரிடர் நிவாரண நிதிக்காக வெளிநாடுகளிலிருந்து நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதில்லை என இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி வழங்க முன்வந்ததாகச் செய்திகள் வெளியாகின. பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் அதை மறுத்தது. எப்படியாகிலும் இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு சர்ச்சைகளுக்கு வித்திட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. நம்முடைய அரசே பல நாடுகளுக்கு இதுபோன்ற சமயத்தில் உதவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நிலையில், நாம் உதவிபெறுவதில் என்ன தவறு? பெருந்துயர்க் காலங்களில் இப்படியான உதவிகள் ஒருவருக்கொருவர் அரவணைத்துக்கொள்வதற்கான சின்ன வெளிப்பாடுதான்.
2004-ல் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் பெரும் நாசத்தை ஏற்படுத்தியபோது, ‘வெளிநாடுகளின் உதவிகளை ஏற்பதில்லை’ என்ற முடிவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்தது. வீண் கவுரவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அந்த முடிவை மரபாகத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமா என்பதை மோடி அரசு பரிசீலிக்க வேண்டும். தவிர, வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்பதில்லை என்று 2016-ல் பாஜக தலைமையிலான மத்திய அரசு வெளியிட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. நல்லெண்ண நடவடிக்கையாக வெளிநாடுகள் உதவி அளிக்க முன்வந்தால் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளலாம் என்றுதான் அந்த அறிக்கை சொல்கிறது. எனவே, மத்திய அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கேரளம் சந்தித்திருப்பது வரலாற்றுத் துயரம். தனியார் அமைப்புகள், பொதுச் சமூகம், அனைத்து மாநிலங்கள் என்று ஒவ்வொரு தரப்பும் தன்னாலான உதவிகளை அம்மாநிலத்துக்கு அளிப்பது முக்கியம். மத்திய அரசு ரூ.600 கோடி இதுவரை அளித்திருக்கிறது. ‘இது முதல் கட்ட நிதிதான், மதிப்பீடு செய்த பின்னர் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும்’ என்று உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. மத்திய அரசு தன்னாலான முழு உதவிகளையும் செய்ய வேண்டும்.
உலகெங்கும் இருக்கும் ஜனநாயக அரசுகள் இன்னொரு நாட்டுக்குப் பேரிடர் என்றால் ஓடோடி உதவுவதுதான் வழக்கம். நாமும் அவ்வழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். இதில் கவுரவம் பிம்ப அரசியலுக்கு வேலையில்லை. நிதி உதவி, நிபுணர்களின் ஆலோசனை, மீட்பு நிவாரணத்துக்குத் தேவைப்படும் கருவிகள் கலன்கள் ஆகியவற்றைக் கேரளம் பெறத் தடையேதும் இருக்கக் கூடாது!