விற்பனையில் சரிவு, போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத நிலை, புதிய வரிமுறையின் பாதிப்புகள் என்று பல்வேறு நெருக்கடிகளை நூல் பதிப்புத் துறை சந்தித்துவரும் சூழலில், மின்நூல் உருவாக்கம் மற்றும் அதற்கான சந்தை வாய்ப்புகளைப் பதிப்பாளர்களுக்குக் கொண்டுசெல்ல தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. செல்போன் மூலம் இணையப் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில், அச்சு நூல்களை வாசிக்கும் பழக்கம் குறைந்திருப்பதை உணர முடிகிறது. இந்நிலையில், அரசு மனதுவைத்தால் பதிப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆக்கபூர்வமாக வழிகாட்ட முடியும்.
ஆங்கிலத்தில் புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்கள், அச்சுப் புத்தகங்களை வெளியிடும்போதே மின்நூல்களை ‘அமேசான்’ போன்ற இணையதளங்களின் வழியாகவும் சந்தைப்படுத்துகின்றன. அச்சுப் புத்தகங்களும் மின்நூல்களும் ஒரே நேரத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. வாசகர்கள் தாங்கள் விரும்பிய வடிவங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால், தமிழகப் பதிப்பாளர்கள் பலரும் அச்சுப் புத்தகங்களை மட்டுமே பதிப்பித்துவருகின்றனர். பெரும்பாலான பதிப்பகங்களுக்கு மின்நூல்கள் உருவாக்கம் தொடர்பாகப் போதிய விழிப்புணர்வு இல்லை எனலாம்.
அச்சுப் புத்தகங்களைத் தயாரிக்கும்போது காகிதம், அச்சுக்கூலி மற்றும் புத்தகக் கட்டுமானச் செலவுகள் தவிர்க்க முடியாதவை. மின்நூல் உருவாக்கத்தில் இத்தகைய செலவுகளை மிச்சப்படுத்தவும் முடியும். குறைவான பிரதிகளே விற்பனையாக வாய்ப்புள்ள புத்தகங்களுக்குக் குறும்பதிப்புகளை வெளியிடும் பதிப்பாளர்கள், அப்புத்தகங்களின் மின்நூல் வடிவத்தை இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் பலனடைய முடியும். அரிதான புத்தகங்களை எப்போதும் இணையம் வழியாக வாசகர்கள் பெறுவதற்கும் இது வழிவகுக்கும்.
தற்போது, ‘அமேசா’னின் ‘கிண்டில்’ தவிர ‘இ.பப்’, ‘பி.டி.எஃப்’, ‘ஜி.ஐ.எஃப்.’, ‘டிஜே.வியு’, ‘பிராட்பேண்ட் இ-புக்’, ‘டைசி’ எனப்படும் ‘டிஜிட்டல் ஆடியோ புக்’ என்று ஆங்கில மின்நூல் உருவாக்கத்தில் 15-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அவற்றைப் பற்றி தமிழ்ப் பதிப்பாளர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கும் தமிழக இணையக் கல்விக் கழகமே இந்தப் பயிற்சி வகுப்புகளை முன்னெடுக்கலாம்.
உண்மையில், தகவல் தொழில்நுட்பத் துறையின் இத்தகைய பொறுப்புகளைப் பற்றி அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் பதவி தொடர்ந்து காலியாகவே இருக்கிறது. அடுத்தடுத்த நிலையில் இருக்கும் அதிகாரிகள் கூடுதல் பொறுப்பு வகிக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையின் நிர்வாகத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவதன் மூலம் பல நல்ல மாற்றங்களுக்கு அரசு வித்திட முடியும்.
தமிழ்ப் பதிப்புத் துறை லாபகரமான தொழில் அல்ல. பதிப்பாளர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் காரணமாகத் தங்களது அறிவையும் உழைப்பையும் கொடுத்தே இத்துறையை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். அவர்களது பங்களிப்பே தமிழக அறிவுத் துறையின் பெரும்பலம். அவர்களை ஆதரிக்க வேண்டியதும் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களைப் பயிற்றுவிக்க வேண்டியதும் அரசின் கடமை.