தலையங்கம்

13-ம் ஆண்டில் இந்து தமிழ் திசை | வாசிப்பை நேசிக்கும் வாசக நெஞ்சங்களே...

செய்திப்பிரிவு

வாசகர்களின் பாசப் பிணைப்புடன் 'இந்து தமிழ் திசை நாளிதழின் பரவசப் பயணம் பன்னிரண்டாம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. ஊடக அறத்துடன் தரமான நாளிதழாக 'இந்து தமிழ் திசை' இன்றளவும் மிடுக்குடன் திகழக் காரணம் வாசிப்பை நேசிக்கும் வாசக நெஞ்சங்களாகிய உங்களின் பேராதரவுதான்!

வழக்கம் போலவே, இந்த ஆண்டும் நேரடியாகவும், செய்தியாளர்கள் மூலமும் முன்கூட்டியே வாழ்த்துகளைப் பறக்கவிட்ட பேரன்பு வாசகர்களுக்கு ஆசிரியர் குழு சார்பில் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு மேலோங்கியிருக்கும் சூழலில், தரம், நம்பகத் தன்மையை போற்றிப் பாதுகாக்கும் 'இந்து தமிழ் திசை நாளிதழ், அன்பு வாசகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாளிதழை மெருகூட்டும் பணிகளில் களமிறங்கி விட்டது என்கிற மகிழ்ச்சியான தகவலை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கதகதப்பு இப்போதே பரவத் தொடங்கிவிட்டது. இந்த ஜனநாயகத் திருவிழாவின் ஆரம்பமாய், பட்டிதொட்டியெல்லாம் தலைவர்களின் பிரச்சாரம் மக்களைத் தென்றலாய்த் தீண்டத் தொடங்கி விட்டது.

6 மாதங்களுக்கு முன்பே ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்ட அரசியலை ஆர்வமுடன் உற்றுநோக்கும் வாசகர்கள், 'இந்து தமிழ் திசையும் முன்கூட்டியே களமிறங்கி நடுநிலையுடன் செய்திகளை வாரி வழங்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட தொடங்கி விட்டார்கள். மறுக்க முடியுமா? புயலாய்க் கிளம்பிவிட்ட செய்தியாளர் குழு, அதற்கான முழு ஆயத்தங்களில் இறங்கியுள்ளது.

அனைத்துத் தரப்பு வாசகர்களின் வாசிப்பை பலப்படுத்தும் வகையில் புதுப்புது பகுதிகள், தொடர்கள் நாள்தோறும் நமது நாளிதழை அலங்கரிக்க இருக்கின்றன. அதிக பக்கங்கள், அதிக செய்திகளுடன் அதிக நேர பயனுள்ள வாசிப்புக்கான உத்தரவாதத்தை அளிப்பதோடு, வாசகர்களின் பங்களிப்பை வசப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். கூடிய விரைவிலேயே புதுப்பொலிவுடன் உங்கள் அபிமான 'இந்து தமிழ் திசை நாளிதழ் உங்கள் கைகளில் தவழும் என உறுதி அளிக்கிறேன்.

'இந்து தமிழ் திசையின் hindutamil.in எனும் இணையதளத்தில் அரசியல், இலக்கியம், வாழ்வியல், உணவு, சினிமா, ஆன்மிகம் என எண்ணற்ற பிரிவுகளில் நாம் பகிர்ந்த காணொளிகள் வாசகர்களிடம் அபரிமிதமான வரவேற்பைப் பெற்றவை. நமது தயாரிப்புகள் யூ-டியூப் பக்கம் மூலமாக 25 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளன.

8 லட்சத்து 99 ஆயிரம் பேர் நமது யூ-டியூப் பக்கத்தைப் பின்தொடர்வதை பெருமையுடன் பதிவு செய்கிறேன். முகநூலில் 31 லட்சம், எக்ஸ் தளத்தில் 12 லட்சம், இன்ஸ்டாகிராமில் 5.68 லட்சம் என நமது சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

நாளிதழ், இணையதளத்துக்கு மட்டுமல்லாது, 'தமிழ் திசை' பதிப்பகத்தையும் கொண்டாடி வரும் நமது மதிப்புக்குரிய வாசகர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நமது வெளியீடுகளான 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்' 70 ஆயிரம் பிரதிகளைத் தாண்டி விற்று சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

மாபெரும் தமிழ்க் கனவு' 50 ஆயிரம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சிறப்பிடம் பிடித்திருக்கிறது. 'என்றும் தமிழர் தலைவர்' புத்தகத்தைப் பெரியாரின் நேசர்கள் தாமாகவே முன்வந்து வாங்கிச் சென்று ஆயிரக்கணக்கில் விற்றுவிட்டனர். தோழர் நல்லகண்ணு பற்றிய 'அறவாழ்வின் அடையாளம் புத்தகம் வெளியான 3 வாரங்களிலேயே 1,000 பிரதிகள் விற்றுவிட்டன.

உங்கள் மேலான ஆதரவு, ரசனையின் அடிப்படையில் நமது பதிப்பகம் மூலம் இன்னும் பல்வேறு சுவாரசியமான தலைப்புகளில் அதிக புத்தகங்களை வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.

தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பல்வேறு துறை ஆளுமைகளைக் கவுரவிக்கும் வகையில், அன்பாசிரியர், சீர்மிகு பொறியாளர், மருத்துவ நட்சத்திரம், தமிழ்த் திரு எனப் பல்வேறு விருது நிகழ்ச்சிகளையும் 'இந்து தமிழ் திசை' நடத்தி வருகிறது.

மகளிர் திருவிழா, உனக்குள் ஓர் ஐஏஎஸ், வாசிப்புத் திருவிழா, படிப்போம் உயர்வோம், நாளைய விஞ்ஞானி, அரசு வேலை வழிகாட்டி, தொழில்முனைவோர் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் தங்கள் வாழ்வில் வெளிச்சம் பெற ஊக்குவித்து வருகிறோம்.

காலத்துக்கும் இந்த வெற்றிப் பயணம் தொடர வாசகர் படை நமது நாளிதழுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பன்னிரண்டு ஆண்டு பயணத்தில் நம்மை தாங்கிப் பிடித்து தோள் கொடுக்கும் விளம்பரதாரர்கள், நாளிதழ் விற்பனை முகவர்களுக்கும் இந்து தமிழ் திசை' சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

தமிழால் இணைந்தோம்... தரத்தால் நிமிர்ந்தோம்.. தனி முத்திரை பதிப்போம்!!!

- வி.வெங்கடேஸ்வரன், ஆசிரியர்.

SCROLL FOR NEXT