தலையங்கம்

சென்னைக்கு மேன்மை சேர்க்கும் மெட்ரோ ரயில் சேவை!

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரின் 386ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், சென்னை மெட்ரோ ரயில் சேவையும் தனது 10ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கிறது.

சாலைப் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, ஆரம்பத்தில் இருந்த சுணக்கத்தைக் கடந்து, இன்றைக்கு வெற்றிகரமான சேவையாகவும், சென்னையின் வளர்ச்சிக்கான முக்கியத் தூண்களில் ஒன்றாகவும் உருவெடுத்திருக்கிறது.

2006ஆம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில், மெட்ரோ ரயில் சேவைக்கான திட்டத்தைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பணி டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது. இத்திட்டம் முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பு முயற்சித் திட்டமாக அறிவிக்கப்பட்டது.

2007இல் மத்திய அரசும் தமிழக அரசும் இதற்கான முதல் கட்டப் பணிகளைத் தொடங்கின. ‘ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன’த்தின் (ஜேஐசிஏ) நிதிப் பங்களிப்பு இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. நில அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களைத் தாண்டி மெட்ரோ ரயில் சேவைக் கட்டுமானம் முன்னெடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றம், அரசியல் முரண்கள் ஆகியவற்றைக் கடந்து, 2015 ஜூன் 29ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

இன்றைய தேதியில் முதல் கட்டமாக சென்னையில், இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. விம்கோ நகரிலிருந்து சென்னை விமான நிலையம் வரை ஒரு ரயில் சேவையும், சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை இன்னொரு ரயில் சேவையும் செயல்பட்டுவருகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. மூன்று வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்குப் பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகின்றது. 2028ஆம் ஆண்டுவாக்கில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவையைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் இந்தியாவிலேயே அதிகக் கட்டணம் கொண்ட மெட்ரோ என்கிற பெயரே சென்னை மெட்ரோவுக்கு ஆரம்பத்தில் இருந்தது. மெட்ரோ ரயில் பணிகள் கட்டுமானக் காலத்தில் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவது தொடர்கதையாகவே இருக்கிறது.

போக்குவரத்து நெரிசல், மாற்றுவழிப் பாதை தொடர்பான சிக்கல்கள் எனப் பல்வேறு சிக்கல்கள் இன்றுவரை தொடர்கின்றன. பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணியில் ஏற்படும் கால தாமதம் இந்தப் பிரச்சினைகளின் தீவிரத்தை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது.

தவிர, கட்டுமானப் பணிகளின்போது விபத்து நேர்ந்து தொழிலாளிகளும் மக்களும் இறப்பதும் தொடர்கிறது. அண்மையில்கூட, பெரும்பாக்கம் அருகே செம்மொழிச் சாலையில் மெட்ரோ ரயில் வழித்தடக் கட்டுமானப் பணியின்போது, 60 அடி உயரத்திலிருந்து விழுந்து ஜார்க்கண்டைச் சேர்ந்த ஒரு தொழிலாளி உயிரிழந்தார். ஆனால், எல்லா இடர்ப்பாடுகளையும் தாண்டி இன்றைக்கு சென்னை மெட்ரோ வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்தச் சேவை அறிமுகமான காலக்கட்டத்திலிருந்து முதன்முறையாக 2025 ஜூலையில் 1.03 கோடி பயணிகள் பயணித்திருக்கின்றனர். 2025 ஜூன் மாதத்தை ஒப்பிட்டால் இது 12.5% அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

மெட்ரோ ரயிலை இயக்க அதிக எரிபொருள், அதிக மின்சாரம் தேவையில்லை என்பது இதன் சாதக அம்சங்களில் ஒன்று. பயண நேரம் குறைவாகவும் வசதிகள் அதிகமாகவும் இருப்பதால் பயணிகள் மெட்ரோ ரயில்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியம் இல்லை. இது சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணியாக அமைந்திருக்கிறது.

இந்தப் பின்னணியில், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் இதுவரை கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை இன்னும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் தொடர மெட்ரோ ரயில் நிர்வாகமும் அரசும் மனங்கொள்ள வேண்டும்!

SCROLL FOR NEXT