தலையங்கம்

தூய்மைப் பணியாளர்களுக்கு நியாயம் கிடைக்கட்டும்!

செய்திப்பிரிவு

பணி நிரந்தரம் கேட்டும் சம்பளக் குறைப்பை எதிர்த்தும் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம் நள்ளிரவுக் கைது நடவடிக்கை மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் மாற்றாந்தாய்போல நடந்துகொண்ட தமிழக அரசின் அணுகுமுறை அனைத்துத் தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 11 மண்டலங்களுக்கான திடக்கழிவு மேலாண்மை சார்ந்த பணிகள் கடந்த அதிமுக காலத்திலேயே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் 4 மண்டலங்களில் இப்பணிகளை நிரந்தரப் பணியாளர்களும் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த தற்காலிகப் பணியாளர்களும் செய்துவருகின்றனர்.

அண்மையில் ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய இரண்டு மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ‘சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் லிமிடெட்’ என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்குத் தேவைப்படும் 3,809 தூய்மைப் பணியாளர்களில் ஏற்கெனவே தற்காலிகப் பணியாளர்களாக இருக்கும் 2,034 பேருக்கு முன்னுரிமை அளித்து எடுத்துக்கொள்வதாக அந்நிறுவனம் கூறுகிறது.

எனினும், இத்தொழிலாளர்கள் தற்போது பெறும் ஊதியமான ஏறக்குறைய ரூ.23,000 என்பது இனி ரூ.16,000 ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. 12 நாள் தற்செயல் விடுப்பு, 12 நாள் ஈட்டிய விடுப்பு, தேசிய விடுமுறையின்போது வேலை செய்தால் இரண்டு மடங்கு ஊதியம், ரூ.11.52 லட்சம் மதிப்பில் விபத்துக் காப்பீடு போன்றவை அவர்களுக்கு முன்வைக்கப்பட்டாலும், ஊதியக் குறைப்பு என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அதிமுக ஆட்சியில் தூய்மைப் பணிகளை நிர்வகிப்பது தனியார்மயம் ஆக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் அந்தப் பணிகள் நிரந்தரம் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டிப் போராடும் அரசு மருத்துவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் வரிசையில் இப்போது தூய்மைப் பணியாளர்களும் சேர்ந்துள்ளனர்.

தனியார்மயமாக்கம் மூலம் திடக்கழிவு மேலாண்மை மேம்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது. இத்தகைய வாதம், ஒட்டுமொத்தமாக அரசு நிர்வாகத்தின் தோல்வியாகவே பார்க்கப்படும் என்பதே உண்மை. போராடியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வராமல், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வந்ததும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இயற்கைப் பேரிடர்கள், கரோனா தொற்று என எதையும் பொருட்படுத்தாமல் உழைப்பைக் கொட்டும் பணியாளர்கள், மிகமிக அரிதாகத் தங்களுக்கான உரிமைக்குரலை எழுப்பும்போது, அரசு அவர்களை எப்படி அணுகுகிறது என்பதையே இவை காட்டுகின்றன.

சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகை போராட்டத்துக்கான இடம் அல்ல. எனினும் அதன் முன்னால், பெரும்பாலும் பெண் பணியாளர்களே பங்குபெற்ற இந்தப் போராட்டம் அமைதியான முறையில்தான் நடந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

நகர்ப்புறத் தூய்மைப் பணியாளருக்குக் காலை உணவு, பணியின்போது இறக்கும் பணியாளருக்கான நிதியுதவி உயர்வு, அவர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கு உதவித்தொகை, சொந்த வீடு உள்பட ஆறு திட்டங்களைத் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. அவர்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றினாலே இத்தகைய கூடுதல் திட்டங்களுக்குத் தேவை இருக்காது.

இப்போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்களை வழிநடத்திவரும் ‘உழைப்போர் உரிமை இயக்கம்’ சார்பில், மாநகராட்சியின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. பணி தொடர்பான தங்களது ஒவ்வொரு உரிமையையும் வழக்கு நடத்தித்தான் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்கிற தூய்மைப் பணியாளர்களின் துயர நிலை கட்டாயம் மாற வேண்டும்.

SCROLL FOR NEXT