திருநெல்வேலியில் கவின் செல்வகணேஷ் என்கிற இளைஞரின் உயிரைப் பறித்த சாதி ஆணவக் கொலை தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. நம் சமூகம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்கிற கேள்வியையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை எழுப்பியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (27), பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை சந்திரசேகர் ஒரு விவசாயி. தாய் தமிழ்ச்செல்வி ஆசிரியை. இவர்களின் மூத்த மகனான கவினும் திருநெல்வேலி கேடிசி நகரைச் சேர்ந்த சித்தா மருத்துவரான சுபாஷிணியும் காதலித்து வந்ததாகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுபாஷிணியின் குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. சுபாஷிணியின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி இருவருமே காவல் துறையில் உதவி ஆய்வாளர்கள்.
சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கவின் சில நாள்களுக்கு முன், சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். ஜூலை 27 அன்று திருநெல்வேலியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குத் தன் தாயுடன் தாத்தாவைச் சிகிச்சைக்காக அழைத்து சென்றிருந்தார். அங்கு சுபாஷிணி மருத்துவராகப் பணிபுரிந்துவந்தார்.
கவின் சுபாஷிணியுடன் பழகக் கூடாது என ஏற்கெனவே எச்சரித்துவந்த சுபாஷிணியின் தம்பி சுர்ஜித் (23), கவினைப் பேச்சுவார்த்தைக்காக வெளியே அழைத்துச் சென்றதாகவும் கவினின் தாயின் முன்னிலையிலேயே வெட்டிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
கொலை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டர் தடுப்புச் சட்டமும் அவர் மீது பாய்ந்திருக்கிறது. கவின் உறவினர்களின் எதிர்ப்பு, சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களை அடுத்து சுர்ஜித்தின் பெற்றோர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ‘பெற்றோரின் தூண்டுதலின்பேரிலேயே சுர்ஜித் கொலை செய்திருக்கிறார்.
எனவே, அவரது பெற்றோரையும் கைதுசெய்ய வேண்டும்’ என கவினின் உறவினர்கள் வலியுறுத்தி அவரது சடலத்தை வாங்க மறுத்துப் போராட்டமும் நடத்தினர். ஜூலை 30 மதியம் வரைக்கும் கவினின் சடலம் அவரது பெற்றோரால் வாங்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளது. சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன் அக்காவுடன் கவின் பழகுவது பிடிக்காததால் வெட்டிக் கொன்றதாக சுர்ஜித் அளித்துள்ள வாக்குமூலம், இது ஒரு சாதி ஆணவக் கொலை என்பதை உணர்த்துகிறது.
நாடு முழுக்க இப்படியான குற்றங்கள் நிகழ்கின்றன. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2021இல் ஆணவக் கொலை உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கை 33 ஆக இருந்த நிலையில், 2024இல் 251 ஆக அதிகரித்திருக்கிறது.
பல குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வாய்ப்பு குறைவு என்பதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றே செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மனித வளத்துக்கு அடிப்படையான இளைஞர்கள் ஒருபக்கம் சாதி வெறியால் கொல்லப்படுவதும், இன்னொரு பக்கம் அத்தகைய குற்றத்துக்காகச் சிறையில் காலம் தள்ளுவதும் சாபக்கேடு.
இந்தப் பிரச்சினைக்குச் சட்டம் ஒழுங்கு தொடர்பான தடுப்பு நடவடிக்கை மட்டுமல்லாமல், சமூக அறிவியல் தளத்திலான பரப்புரைப் பணிகளும் கட்டாயம் தேவை. தர்மபுரி, உசிலம்பட்டி பகுதிகளில் முன்பு அதிகம் நிகழ்த்தப்பட்ட பெண் சிசுக் கொலை விழிப்புணர்வுப் பரப்புரைகளால்தான் குறைந்தது. அதேவிதமான முன்னெடுப்புகள் சாதி ஆணவக் கொலை தடுப்புக்கும் அவசியம்.
பல செயல்பாட்டாளர்கள் வலியுறுத்திவருவதைப் போல, சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் சட்டங்கள் போதும் என்று அரசு இன்னும் கருதிக்கொண்டிருக்கக் கூடாது. தனிச்சட்டங்கள் மூலம் சாதி ஆணவக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், அதை ஆதரிப்பவர்கள் என அனைவரும் உறுதியான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டால்தான் சமூக அளவிலும் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்!