நி
திநிலையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஐடிபிஐ வங்கி யில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி), அந்த வங்கியின் பங்கில் 51% அளவுக்கு முதலீடு செய்யும் உத்தேசத் திட்டத்துக்கு, அங்கீகாரம் வழங்கியிருக்கிறது, ‘இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று, வளர்ச்சி ஆணையம்’ (ஐஆர்டிஏஐ). அரசுக்குச் சொந்தமான ஐடிபிஐ வங்கி, வாராக் கடன்களின் அதிகரிப்பால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து, ரிசர்வ் வங்கியின் திருத்த நடவடிக்கைகளுக்கு ஆட்பட்டிருக் கிறது. அந்த வங்கியின் நிதிநிலையைப் பாதிக்காமலும், எவருக் கும் வலியில்லாமலும் நிதியை அளிப்பதாக அரசு கருதுகிறது. ஆனால், இந்த நடவடிக்கை சில கேள்விகளை எழுப்பி யிருக்கிறது.
ஐஆர்டிஏஐ-யின் இந்த முடிவால், ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி நிறுவனம் ஏற்கெனவே வைத்திருக்கும் பங்குகளுடன் மேலும் 40% சேர்த்து, மொத்தம் 51% ஆக்கப்படும் என்று தெரிகிறது. இந்த 40% பங்குக்கான தொகை ரூ.10,000 கோடியைத் தாண்டும் என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன. 2017 மார்ச் 31 உடன் முடிந்த ஆண்டில், முதலாண்டு சந்தா வாக எல்ஐசி நிறுவனத்துக்குக் கிடைத்துள்ள ரூ.1.24 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால் இந்தத் தொகை சிறு துளிதான். அதே சமயம், கடந்த நிதியாண்டில், மத்திய அரசிடமிருந்து ஐடிபிஐ-க் குக் கிடைத்த ரூ.12,865 கோடிக்குச் சமமான தொகை இப்போது எல்ஐசி மூலம் வழங்கப்படவிருக்கிறது. 2018 மார்ச் 31-ல் முடிந்த 12 மாத காலத்தில் ஐடிபிஐ வங்கிக்கு ஏற்பட்டுள்ள நிகர நஷ்டம் ரூ.8,238 கோடி. இந்நிலையில், ஐஆர்டிஏஐ-யின் இந்நடவடிக்கை அவ்வங்கியை நஷ்டத்திலிருந்து மட்டும் மீட்குமா, நிர்வாகம் மேம்படுவதற்கும் உதவுமா என்று தெரியவில்லை.
இந்த உத்தேச முதலீட்டு முடிவு தொடர்பாக எழுந்திருக்கும் விவாதங்களுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைச் சிக்கலிலிருந்து மீட்க, ரொக்கப் புழக்கம் அதிகமுள்ள அரசு நிறுவனங்களிடமிருந்து எடுக்கிறது அரசு. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களின் நலனைக் காக்க வேண்டிய கடமை ஐஆர்டிஏ அமைப்புக்கு இருக்கிறது. எனினும், இந்த நடவடிக்கையின் மூலம், எந்த நிறுவனத்திலும் அதன் பங்கு மதிப்பில் 15%-க்கும் அதிகமான நிதியை எல்ஐசி முதலீடு செய்யக் கூடாது என்ற வரம்பைத் தளர்த்தியிருக்கிறது ஐஆர்டிஏ. இது எல்ஐசியின் வாடிக்கையாளர்களின் நலனுக்கு முரணான செயல்.
மூலதனச் சந்தை நடவடிக்கைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ‘செபி’, எல்ஐசியில் பணம் செலுத்தும் சிறு முதலீட்டாளர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு அரசு நிறுவனம், இன்னொரு அரசு நிறுவனத்தில் முதலீடு செய்வதால் ஏற்படக்கூடிய தொடர் விளைவுகளை வங்கிகளைக் கண்காணிக்க வேண்டிய ரிசர்வ் வங்கியும் புறக்கணித்துவிடக் கூடாது!