குழந்தைகளின் குடியரசுத் தலைவராக வாழ்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று. எளிய குடும்பங்களில் வாழும் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு அவர் என்றும் கல்வியில் முன்னோடியாக இருப்பார். கல்வியை முன்னேற்றத்துக்கான மகத்தான கருவியாக்க முடியும் என்பதற்கு அவர் உதாரணராக இருந்தார்.
அணுசக்தி விஞ்ஞானத்தில் தேட்டம் கொண்டிருப்பதாக ஒரு நாடு இருந்தாலும், அந்நாட்டின் அறிவியல் கடைசி மனிதனுக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். எடை குறைந்த செயற்கைக் கால் உருவாக்கத்தில் அவர் காட்டிய அக்கறை இதை நமக்குச் சொல்கிறது.
எல்லாவற்றுக்கும் மேல் ஒருவர் எந்தப் பணியில் இருந்தாலும், மக்கள் மத்தியில் தன்னை இருத்திக்கொள்ள வேண்டும், மக்கள் எப்போதும் அணுகும் நிலையில் இருக்க வேண்டும் என்பதைத் தன் வாழ்க்கையின் மூலம் வாழ்ந்துகாட்டினார். எளிமையாளர் கலாம் நினைவு நாளில் அவர் நினைவை மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்வதை ‘இந்து தமிழ்’ பெருமையாகக் கருதுகிறது. கலாம் நினைவைப் போற்றுவோம்!