அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம், இந்தியாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியிருக்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களில் இப்படி ஒரு கோர விபத்து நேர்ந்ததில்லை என்னும் அளவுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படுவது அவசியம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனில் உள்ள காட்விக் விமான நிலையம் நோக்கி, ஜூன் 12 அன்று கிளம்பிய ஏர் இந்தியா விமானம் (போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில வினாடிகளில் மேகானிநகர் பகுதியில் உள்ள குஜராத் அரசின் எம்ஜே மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்து தீப்பிடித்தது.
இதில் பயணிகள், விமானப் பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், அருகில் இருந்தவர்கள் என மொத்தம் 279 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். பயணிகளில் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்திருக்கிறார். இச்சம்பவம் குறித்துப் பொதுவெளியில் பல்வேறு தகவல்கள் பரவுகின்றன. குறிப்பாக, போயிங் விமானங்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் விவாதங்கள் நடக்கின்றன.
ஒரு காலத்தில் உயர் தொழில்நுட்பம் கொண்ட விமானமாகக் கருதப்பட்ட போயிங் விமானங்கள் சமீபகாலமாக எதிர்மறைப் பேசுபொருளாகியிருக்கின்றன. ட்ரீம்லைனர் ரக விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே விபத்துகள், தொழில்நுட்பக் கோளாறுகள் அடிக்கடி நிகழ்வதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
2014 ஜனவரி முதல் இந்தியாவில் இந்த விமானம் பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது ஏர் இந்தியாவிடம் 26 போயிங் 787-7 ரக விமானங்கள், ஏழு போயிங் 787-9 ரக விமானங்கள் இருக்கின்றன. இவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வுசெய்யப்பட வேண்டும். பொதுவாக, விமான விபத்துகளுக்கு ஒற்றைக் காரணம் மட்டும் இருப்பதில்லை.
பல்வேறு கோளாறுகளின் ஒட்டுமொத்த விளைவாகவே விபத்துகள் நேர்கின்றன. இன்றைய நவீனத் தொழில்நுட்பங்கள் விமானப் போக்குவரத்துத் துறையில் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கின்றன. அதேவேளையில், விமானப் பயணங்களில் ஆபத்து இருப்பதை எந்தக் காலத்திலும் புறக்கணித்துவிட முடியாது.
தேச விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 2005 முதல் 2023 வரை நிகழ்ந்த விமான விபத்துகளின் அடிப்படையில், ஓடுதளத்தில் தரையிறங்கும் தருணங்களில் அதிகமாக (53%) விபத்துகள் நேர்ந்திருக்கின்றன. புறப்பட்டுச் செல்லும் தருணங்களில் 8.5% விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன.
ஊகங்களை உண்மை போல பரப்புபவர்கள் அதிகமாக இயங்கும் சமூக ஊடக யுகத்தில், இதுபோன்ற விபத்துகள் தொடர்பான விசாரணையை முழுமையாகவும், விரைவாகவும் முடிப்பது அவசியம். விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது குறித்தும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. மீட்புப் பணிகளும் மூன்று நாள்களுக்கு மேலாக நடைபெற்றிருக்கின்றன.
இவை மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. விமானப் பயணங்கள் வெளிநாடுகளையும் உள்ளடக்கியவை என்பதால், இதுபோன்ற விபத்துகளின் பின்னணி குறித்து, அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (எஃப்ஏஏ), ஐரோப்பிய ஒன்றிய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு முகமை (இஏஎஸ்ஏ) போன்ற அமைப்புகளிடமும் தகவல் பரிமாற்றம், ஆலோசனை போன்றவற்றை இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மேற்கொள்வது அவசியம்.
இதில் சதித்திட்டங்கள் இருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்தால் அவற்றையும் பகிர்ந்துகொண்டு பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். மிக மிக முக்கியமாக, பயணிகள் தாங்கள் பயணிக்கப்போகும் விமானங்களின் சிறப்பம்சங்கள், பாதுகாப்பு அம்சங்கள், அவசரக்கால ஏற்பாடுகள் போன்றவற்றை எளிதில் தெரிந்துகொள்ளும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் விமான விபத்துகள் நேராமல் தவிர்க்கவும், தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தால் அவற்றை ஆரம்பத்திலேயே சரிசெய்யவும் இப்போதே நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்!