அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்கிற நோக்கில், அதிபர் டிரம்ப் எடுத்துவரும் அடக்குமுறை நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கின்றன. குடியேறிகளால் உருவாக்கப்பட்டதாகப் போற்றப்படும் அமெரிக்காவில், அந்தப் பிம்பத்தைக் குலைக்கும் வகையில் டிரம்ப்பின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அமெரிக்க அதிபராக இரண்டாம் முறையாக, 2025 ஜனவரி பதவியேற்றது முதலே சர்ச்சைக்குரிய உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறார்.
அந்த வகையில், சட்டவிரோதக் குடியேறிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவித்த டிரம்ப், இந்தியா, மெக்சிகோ, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்ட விரோதக் குடியேறிகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளைத் தொடங்கினார். சட்டவிரோதக் குடியேறிகள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு விமானம் மூலம் அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டது உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகளைக் கைதுசெய்து வெளியேற்றும் நடவடிக்கைகளைக் கண்டித்து, அங்கு ஏராளமானோர் போராட்டத்தில் இறங்கினர். குறிப்பாக, மக்கள்தொகையில் 80%க்கும் அதிகமான லத்தீன் அமெரிக்கர்கள் வசிக்கும் வெஸ்ட்லேக், பாரமவுண்ட் பகுதிகளில் குடியேற்ற - சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகள் அங்குள்ளவர்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தின.
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த போராட்டத்தின்போது வன்முறைச் சம்பவங்களில் போராட்டக்காரர்களில் சிலர் ஈடுபட்டனர். வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டது. அதற்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளில் டிரம்ப் அரசு ஈடுபட்டிருக்கிறது. போராட்டக்காரர்களை அடக்க ராணுவத்தின் ஒரு பிரிவான நேஷனல் கார்டு படையைப் பயன்படுத்தியது கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது.
போராட்டக்காரர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டது போராட்டத்தின் நோக்கத்தையே சிதறடித்துவிட்டதாகவும், கடும் நடவடிக்கையை நியாயப்படுத்த அரசுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதேவேளையில், பெரும்பாலும் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்தப்படுவதாகவும், அதிகாரிகளின் அதீத அடக்குமுறையே வன்முறையில் இறங்கச் சிலரைத் தூண்டுவதாகவும் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கலிபோர்னியா மாகாண ஆளுநரான, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கேவின் நியூஸம், டிரம்ப் அரசின் இந்நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். தன்னிடம் அனுமதி பெறாமல் நேஷனல் கார்டு படையை அனுப்பியது தவறு என்று விமர்சித்திருக்கும் அவர், லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அனுப்பப்பட்ட நேஷனல் கார்டு படையினருக்கே உணவு, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயரான கரேன் பாஸும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை விமர்சித்திருக்கிறார். கலிபோர்னியா மாகாணத் தலைவர்களை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதையடுத்து, இது குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான அரசியல் மோதலாகவும் உருவெடுத்திருக்கிறது.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதக் குடியேறிகளால் பயங்கரவாதச் செயல்கள், குற்றச்செயல்கள் நிகழ்த்தப்படுவதாகவும், சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றிவிட்டு, அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்கப்போவதாகவும் தொடர்ந்து முழங்கிவரும் டிரம்ப், இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளைக் கலந்தாலோசிப்பது, அமெரிக்க மாகாணங்களின் அரசுகளிடம் ஆலோசிப்பது என்பன போன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்துவிட்டு அதிரடியாகச் செயல்பட்டுவருகிறார். ஆப்ரிக்கா, மத்தியக் கிழக்கைச் சேர்ந்த 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்கா வருவதற்குத் தடைவிதித்துப் புதிய உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார்.
அமெரிக்காவைப் பலப்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு, அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் அமெரிக்காவைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்துவருவது கண்கூடு. இத்தகைய நடவடிக்கைகளில் நிதானம் தேவை எனச் சர்வதேசச் சமூகம் சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் இது. சட்டவிரோதக் குடியேறிகள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்கள்தான் என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுகும்போதுதான் தெளிவான தீர்வு கிடைக்கும்!