மெ
க்ஸிகோ அதிபர் தேர்தலில், 53% வாக்குகளுடன் வெற்றிபெற்றிருக்கிறார் இடதுசாரிக் கட்சியான தேசிய மறுவளர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் ஓபரடார் (64). டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் குடியேற்றக் கொள்கை, வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடனான மோதல் போக்கு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சிக்கல்கள் என்று பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அதிபராகியிருக்கும் ஓபரடார், பெருவாரியான வாக்குகள் மூலம் தன் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கும் மெக்ஸிகோ மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வாரா என்று பார்க்க வேண்டும்.
முந்தைய அதிபர் என்ரிக் பெனா நியேட்டோ ஆட்சியில் ஊழலும் குற்றங்களும் பெருமளவில் அதிகரித்துவிட்டதாலும், அரசு செயல்படாத தன்மையுடன் இருந்ததாலும் மக்களிடையே அதிருப்தி எழுந்ததை ஓபரடார் புரிந்துகொண்டார். இதைத் தனது தேர்தல் வாக்குறுதியாகக் கொள்வதன் மூலம், மக்களின் ஆதர வைப் பெற முடியும் என்று அவர் கணித்திருந்தார். ஊழலை ஒழிக்கக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். அவரது கணிப்பு பொய்க்கவில்லை.
உள்நாட்டுக் கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும், சமீப காலங்களில் அதிக அளவில் வெளிநாட்டினர் முதலீடுசெய்யும் மையமாக மெக்ஸிகோ விளங்குகிறது. வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக இருப்பதால், மெக்ஸிகோ உலக விநியோகச் சங்கிலியுடன் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. எனினும், சீரற்ற விநியோகம் காரணமாகப் பொருளாதாரத்தில் சமநிலை இல்லை.
வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிரான எண்ணமுடையவர் ஓபரடார். அமெரிக்க அதிபர் டிரம்பை விமர்சிக்கக்கூடியவரும்கூட. வர்த்தகம் தொடர்பாக மெக்ஸிகோவுக்கு எதிராகப் பேசிவரும் டிரம்ப், வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகக் குறிப்பிட்டிருந்தார். மெக்ஸிகோ வுடனான வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை ரத்துசெய்வது குறித்து வெள்ளை மாளிகையிலிருந்து இதுவரை எந்த அறி குறியும் தென்படவில்லை.
இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக மறுபடி கலந்தாலோசிப்பதற்குத் தான் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கும் ஓபரடார், சுதந்திர வர்த்தகத்துக்கான ஆதரவுக் குரலையும் வெளிப்படுத்தி யிருக்கிறார். கடந்த தசாப்தத்தில், பெரும் நெருக்கடியை உருவாக் கிய பொது முதலீட்டுப் பிரச்சினை திரும்பவும் தொடர்ந்து விடுமோ என்று மக்களிடையே எழுந்திருக்கும் அச்சத்தை ஓபரடாரின் நடவடிக்கைகள் போக்குமா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
அமெரிக்காவுக்குச் செல்லும் மெக்ஸிக குடியேறிகள் தொடர்பாக எழுந்திருக்கும் பிரச்சினை, தொண்டைக்குள் சிக்கிய முள்போல் நீடித்துக்கொண்டிருக்கிறது. குடியேற்ற விஷயத்தில் டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், ஓபரடாருக்கு இப்பிரச்சினை பெரும் சோதனையாகவே இருக்கும். இருந்தாலும், வலுவான ஆட்சியமைப்பதில் அவருக்குக் கிடைத் திருக்கும் அதிகாரம், மெக்ஸிகோவின் உள்நாட்டு, வெளியுறவு விவகாரங்களில் ஒத்திசைவை ஏற்படுத்துவதற்கான அடித்தளமாகப் பயன்படும் என்று நம்பலாம்!