தலையங்கம்

கோவை புத்தகக் காட்சி: கொடிசியா காட்டும் வழி!

செய்திப்பிரிவு

கொடிசியா (கோவை சிறுதொழில் கூட்டமைப்பு), பபாசியுடன் (தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்) இணைந்து நடத்தும் 4-வது புத்தகக் காட்சி தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் கலாச்சாரத் திருவிழாவாக மாறிக்கொண்டிருக்கும் புத்தகக் காட்சியை தொழில் துறை சார்ந்த அமைப்பான கொடிசியா உற்சாகத்தோடு தொடர்ந்து முன்னெடுத்துவருவது பாராட்டத்தக்கது.

சென்னையிலும் மதுரையிலும் புத்தகக் காட்சிகள் பபாசியால் நடத்தப்பட்டுவருகின்றன. ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையும், திருப்பூரில் பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து பின்னல் புக் டிரஸ்ட்டும், ஓசூர், மேட்டுப்பாளையம், கரூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்திவருகின்றன. பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகங்களும் ஆண்டுதோறும் புத்தகக் காட்சியை நடத்துவதில் ஆர்வமாகப் பங்கேற்றுவருகின்றன. தமிழ்ப் பண்பாட்டு அமைப்பும் பபாசியும் இணைந்து அரியலூரிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து காங்கேயத்திலும், தவிர, நேஷனல் புக் டிரஸ்ட் உள்ளூர் இலக்கிய அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து புத்தகக் காட்சியை நடத்துகின்றன. தமிழகத்தில் நடந்துவரும் இந்தப் புத்தகக் காட்சிகளில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்துவது மட்டுமே தொழில் துறை அமைப்பு சார்ந்தது. மற்ற அனைத்தும் பதிப்பாளர்களும் இலக்கிய அமைப்புகளும் நடத்துபவை.

கொடிசியா முன்னெடுத்துவரும் புத்தகக் காட்சி முயற்சி, கோவை மாநகரின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்துவருகிறது. பிரம்மாண்ட அரங்கு. உலகத்தரத்திலான தூய்மை. விற்பனையாளர்கள் தங்க பரந்துபட்ட இடம். சுகாதாரமான கழிப்பறை வசதிகள். ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி. புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன்பாக, மாணவர்களைப் புத்தகக் காட்சிக்கு வரவழைக்கும் நோக்கத்துடன் ‘அறிவுக்கேணி’ மூலமாக ‘வாசிப்பும் நேசிப்பும்’ என்ற நிகழ்ச்சியைக் கோவையிலுள்ள 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் நிகழ்த்தியுள்ளது. பிரபல உள்ளூர் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் அங்கு சிறப்புரையாற்றி சுமார் 30 ஆயிரம் மாணவ மணிகளை வாசிப்பின்பால் ஈர்த்துள்ளனர். தவிர, அவர்களுக்குக் கட்டுரை, ஓவியம், பேச்சு, கவிதைப் போட்டிகள் பலவும் நடத்தப்பட்டு இறுதிச்சுற்று போட்டிகள் புத்தகக் காட்சி வளாகத்தில் தினசரி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு அம்சங்களிலும் ஒரு முன்னுதாரணமாக கொடிசியா இருக்கிறது.

பொருளாதாரத் துறையில் சென்னைக்கு நிகராக வளரும் கோவை, அறிவுத் துறையிலும் ஒரு நல்ல சூழலை வளர்த்தெடுக்க விரும்புகிறது. அதற்காகத் தொழில் துறை அமைப்பான கொடிசியா முன்னிற்பதும் மெச்சத்தக்கது. இதேபோல, தொழில் துறை சார்ந்த அமைப்புகள், பொருளாதார விஷயங்களைத் தாண்டி கலாச்சாரப் பங்களிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும், பங்களிக்க வேண்டும் என்பதற்கு கொடிசியா வழிகாட்டியிருக்கிறது. தமிழகத்தின் மற்ற நகரங்களிலுள்ள தொழில் நிறுவனங்களும் தொழில் துறை சார்ந்த அமைப்புகளும் புத்தகக் காட்சி உள்ளிட்ட கலாச்சார முன்னகர்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்!

SCROLL FOR NEXT