தலையங்கம்

பாமக 30: இலக்குகளை நோக்கி பயணம் தொடரட்டும்!

செய்திப்பிரிவு

மூக நீதி, ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம் என்ற நான்கையும் குறிக்கோளாக அறிவித்து சென்னை சீரணி அரங்கத்தில் 1989 ஜூலை 16 அன்று பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கினார் ச.ராமதாஸ். சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கியிருந்த வன்னியர் சமூகத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோராக அறிவிக்கச் செய்ய பெரும்போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்றிருந்தார் ராமதாஸ். தனது அரசியல் பயணத்தை வெறும் சாதி வட்டத்துக்குள் சுருக்கிக்கொண்டுவிடாமல் தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்துக்கும் பாமக பாடுபடும் என்று எல்லையை விரித்தெடுத்தார்.

தேர்தல் பாதையில் அடியெடுத்துவைத்த பிறகு, ஆறு சட்ட மன்றத் தேர்தல்களையும் ஏழு மக்களவைத் தேர்தல்களையும் சந்தித்திருக்கிறது பாமக. பேரலைகள் வீசிய காலக்கட்டத்தில் தான் பங்கேற்ற முதல் இரண்டு தேர்தல்களில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக இரண்டையும் தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தனது கணக்கைத் தொடங்கியது. மத்தியில் கூட்டணி ஆட்சியிலும் பங்கேற்றது. கற்றறிவும் அனுபவ அறிவும் கொண்டவர்களை வேட்பாளர்களாக்கி பதவியில் அமர்த்தியது. அதே நேரத்தில், கட்சியைத் தொடங்கியபோது ராமதாஸ் அறிவித்த உறுதிமொழிகளை அவரே ஒருகட்டத்தில் தளர்த்திக்கொண்டார். கட்சியிலோ, ஆட்சியிலோ பங்கேற்க மாட்டேன், தனது சொந்தச் செலவில்தான் கூட்டங்களுக்கு வந்து போவேன், தேர்தலில் நிற்க மாட்டேன், எனது சந்ததிகளும் தேர்தல் பாதைக்கு வரமாட்டார்கள் என்று உறுதிமொழி கூறிய ராமதாஸ், தனது மகனை மத்திய அமைச்சராக்கியதன் மூலம் உறுதிமொழிகளில் ஒன்று கேள்விக்காளானது. தன்னையன்றி, தன்னுடைய சந்ததிகளுக்கும் சேர்த்து உறுதியளிப்பதும் கேள்விக்குரியதுதான்.

மத்திய அரசில் அங்கம் வகித்த பாமகவின் அமைச்சர்கள் சுகாதாரத் துறையிலும் ரயில்வே துறையிலும் குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றியிருக்கிறார்கள். எனினும், தேர்தல் அரசியலில் திமுக, அதிமுக தவிர்த்து பாமகவால் பயணிக்க முடியவில்லை என்பதையே கடந்த கால வரலாறு நிரூபித்திருக்கிறது. தேர்தல் வெற்றிகளுக்காக அடிக்கடி கூட்டணி மாற வேண்டியிருந்தது. எஞ்சிய கட்சிகளைக் கொண்டு ஒரு மாற்றுக் கூட்டணியை உருவாக்குவதும் எளிதாக இல்லை. இடையில் சாதி அரசியலில் சிக்கி அது தன் நம்பிக்கையாளர்களையும் இழந்தது. தமிழர் நலம் சார்ந்து நடத்தப்படும் போராட்டங்களில் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவு அவ்வப்போது முகிழ்த்தாலும் அது தொடரவில்லை. பாமக தொடங்கப்பட்டபோது அக்கட்சியின் கொள்கையாக அறிவிக்கப்பட்ட தலித் மற்றும் சிறுபான்மையினர் நல்லுறவு தொடக்கக் காலத்திலிருந்த தீவிரத்தை இழந்துவிட்டது என்ற விமர்சனத்துக்கும் அது முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், தேர்தலில் தனித்தே நிற்பது என்று பாமக கடந்த சட்ட மன்றத் தேர்தலில் எடுத்த முடிவு, பாமக – தமிழ்நாடு இரண்டுக்குமே நல்ல விளைவைத் தரவில்லை.

பாமகவின் எதிர்காலமாகப் பார்க்கப்படும் அன்புமணி ராமதாஸ் நிறைய மாற்றுத் திட்டங்களைப் பேசுபவர். ராமதாஸின் கனவுகளை நவீனமாக மொழிபெயர்க்கக் கூடியவர். பாமக, வட மாவட்டங்களைத் தாண்டி தமிழகம் எங்கும் விரவ வேண்டுமானால், அது தொடக்கத்தில் அறிவித்தபடி சாதி எல்லைகளை உடைத்தெறிந்து வெளியே வர வேண்டும். தமிழ், தமிழர் நலன் சார்ந்த விஷயங்களில் தனது கொள்கையில் உறுதியாக நிற்கும் பாமக தமிழர் ஒற்றுமையிலும் தீவிரம் செலுத்த வேண்டும். பயணம் தொடர வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT