தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்காரர்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறை திடீர் சோதனைகள் நடத்துவது புதிதல்ல. ஆனால், இந்தச் சோதனைகளின் தொடர்ச்சியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தோ, சட்டப்படி தண்டனைக்குள்ளானவர்கள் யார் யார் என்பது குறித்தோ வெளிப்படையான தகவல்கள் வெளியிடப்படுவதே இல்லை என்பதுதான் பிரச்சினை. 2016 டிசம்பர் மாதத்தில் ஆற்றுமணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி மற்றும் அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனைகள் தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பின.
அதேபோல், சசிகலா உறவினர் வீடுகள் உட்பட 33 இடங்களில் நடந்ததாகவும் ஸ்பெக்ட்ரம் மல்லி, படேல் குழுமம், கங்கா அறக்கட்டளை குழுமம் உட்பட்ட நிறுவனங்கள் அதில் சிக்கியதாகவும், ரூ.1,430 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறின. ஆனால், இவை தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இன்னமும் தெளிவற்றதாகவே இருக்கிறது.
இந்நிலையில், தற்போது நடத்தப்படும் வருமான வரிச் சோதனைகளின் பின்னணியில் அரசியல் கணக்குகள் இருக்கின்றனவோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. முதல்வரின் உறவினர் அலுவலகங்களில் வருமான வரிச் சோதனைகள் நடப்பதால், அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்த நிலையில், “வருமான வரிச் சோதனை என்பது சாதாரணமான ஒன்று. வருமான வரித் துறையினருக்குச் சந்தேகம் வந்தால், புகார் வந்தால் சோதனை செய்வார்கள். இந்தியா முழுவதும் இயல்பாக நடக்கும் விஷயம்தான் இது” என்று விளக்கமளித்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி.
ஆட்சியில் இருக்கும் கட்சி மாற்றுக் கட்சிகளை அச்சுறுத்தும் வகையிலோ, கட்டுக்குள் வைக்க முயற்சிக்கும் வகையிலோ இதுபோன்ற சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றே மக்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஊழல் ஒழிப்பில் அக்கறை செலுத்துவதாகத் தொடர்ந்து பேசிவரும் பாஜக அரசு, வருமான வரித் துறை போன்ற முக்கியமான துறைகளை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொள்வதாக மக்களிடையே எழுந்துவரும் குரல்களுக்குப் பதிலளிக்க வேண்டும். நடத்தப்படும் வருமான வரிச் சோதனைகள் நம்பகத்தன்மை பெற வேண்டுமென்றால் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகள் தொடர்பான எல்லா விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.