தலையங்கம்

காஷ்மீர் பயங்கரவாதம்: முற்றுப்புள்ளிக்கான தருணம்!

செய்திப்பிரிவு

காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இத்தகைய செயல்கள் மூலம் காஷ்மீரில் பதற்றத்தைப் பரவச்செய்யும் முயற்சிகளில் ஈடுபடும் சக்திகள் முறியடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) பொறுப்பேற்றிருக்கிறது.

அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸின் இந்திய வருகையின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஜூலை 3 முதல், அமர்நாத் புனிதப் பயணத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளவிருக்கும் நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் கவனம் ஈர்க்கிறது. மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட தஹாவர் ஹுசைன் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுக்கிறது.

இந்தத் தாக்குதலில் தங்களுக்குப் பங்கு இல்லை என்று பாகிஸ்தான் மறுத்தாலும், தாக்குதல் நடத்திய கும்பலில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் இருந்தது தெரியவந்திருப்பதால், பாகிஸ்தானின் மறுப்பை இந்தியா ஏற்கவில்லை. “காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்து நரம்பைப் போன்றது” என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் சில நாட்களுக்கு முன்னர் பேசியது, இந்தத் தாக்குதலைத் தூண்டியிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. இது உள்ளூர் பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதல் எனச் சொல்லி தப்பித்துக்கொள்ளும் உத்தியைப் பாகிஸ்தான் கையாள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

காஷ்மீர் பண்டிட்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் எனப் பலரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகிவருகின்றனர். பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டாலும் புதிய உத்திகளுடன் பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. இந்தத் தாக்குதல் பிரதமர் மோடியை நேரடியாகப் பாதிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று பயங்கரவாதிகள் செயல்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரதமர் மோடி அண்மையில் சவுதி அரேபியாவுக்குச் சென்றபோது பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தியிருந்தாலும், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சவுதியிலிருந்து அவசரமாகப் புறப்பட்டுவந்த பிரதமர் இந்த முறை பாகிஸ்தான் வான்வழியைத் தவிர்த்துவிட்டார். பிரதமரின் உத்தரவின்பேரில், நிலவரத்தை நேரில் ஆய்வுசெய்ய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்குச் சென்றிருக்கிறார். எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன.

காஷ்மீர் தலைநகர் நகரிலிருந்து 90 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் பஹல்ஹாமில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. காஷ்மீரில் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமே பிரதானம் என்பதால், இத்தகைய நிகழ்வுகள் சுற்றுலாத் துறையை முடக்கிவிடும் அபாயமும் உள்ளது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த 370ஆவது சட்டக்கூறு நீக்கப்பட்ட பின்னர் காஷ்மீரில் அமைதி நிலவுவதாக அரசுத் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட நம்பிக்கை வார்த்தைகள் குலையும் வகையில் இந்தச் சம்பவங்கள் அமைந்திருப்பதையும் மறுக்க முடியாது.

இத்தகைய சூழலில், இந்தத் தாக்குதலிலும், இதற்கு முன்பு நடத்தப்பட்ட சில தாக்குதல்களிலும் பாகிஸ்தானின் பங்கு இருப்பதை உறுதிசெய்ய அரசு தீர்க்கமாகச் செயல்பட வேண்டும். இந்தத் தாக்குதலைச் சர்வதேசச் சமூகம் வன்மையாகக் கண்டித்திருக்கும் நிலையில், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இனியும் இப்படியான தாக்குதல்களில் ஈடுபட எந்தச் சக்தியும் நினைக்காத அளவுக்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

SCROLL FOR NEXT