தலையங்கம்

தகவல் அறியும் உரிமையை வலுவிழக்கச் செய்வதா?

செய்திப்பிரிவு

அரசு நிர்வாகம் என்றாலே எல்லாமே ரகசியம்தான் என்றிருந்த நிலையை அடியோடு மாற்றியமைத்தது 2005-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்டம். மன்மோகன் சிங் அரசு மேற்கொண்ட புரட்சிகரமான முடிகளின் ஒன்று அது. அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பொதுமக்கள் கேட்டுப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் அதிகார வரம்பை மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்த வேண்டிய தேவைகள் இருக்கும் நிலையில், இதை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டியவை. ‘தேர்தல் ஆணையகப் பதவியைப் போல தகவல் அறியும் சட்டப்படியான ஆணையர்கள் பதவி, அரசியல் சட்டத்தால் உருவாக் கப்பட்டது அல்ல, எனவே ஆணையர்களின் ஊதியம், படிகள், பதவியாண்டு போன்றவற்றைத் தீர்மானிக்கும் உரிமை அரசுக்கு வேண்டும்’ என்று மத்திய அரசு வாதிடுகிறது. இது மிகவும் குறுகிய கண்ணோட்டமாகும்.

தகவல் அறியும் ஆணையத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதில்லை, அதன் பணித் திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. மக்கள் மனு செய்து கேட்காமலேயே பல தகவல்களை அந்தந்த துறைகள் தாங்களாகவே முன்வந்து அளிக்க வேண்டும் என்று தகவல் அறியும் சட்டத்தின் 4-வது பிரிவு கூறுவது புறக்கணிக் கப்படுகிறது. அரசுத் துறைகள் தாங்களாகவே பல தகவல்களை அளித்துவிட்டால், அந்தத் தகவல்கள் தேவை என்று மனு செய்வது குறைந்துவிடும்.

சரியான தகவல் தராவிட்டால் தண்டனை அளிப்பது வழக்க மில்லை என்பதால் அதிகாரிகள் அரைகுறையாகவும் தெளிவில் லாமலும் கேள்விகளுக்குப் பொருத்தமில்லாமலும் தகவல்களை அளிக்கின்றனர். ‘தகவல் அறியும் மக்கள் உரிமைக்கான தேசிய பிரச்சாரம்’ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “மத்தியத் தகவல் அறியும் ஆணையத்தில் 23,500 மேல் முறையீடுகளும், புகார்களும் இன்னமும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே இருக்கின்றன. இப்பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்” என்று கோரியுள்ளது.

பல மாநிலங்களில் இந்த ஆணையங்கள் முடங்கிய நிலையில் அல்லது மிகவும் குறைந்த ஊழியர்களுடன் செயல்படுகின்றன. இதனால், தகவல் அறியக் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மலையெனக் குவிகின்றன. இப்படியான சூழலில், இந்தச் சட்டத்துக்குத் திருத்தம் செய்ய மத்திய அரசு விரும்பினால் அது இந்த அமைப்புகள் மேலும் சுதந்திரமாகவும் துரிதமாகவும் செயல்பட அதிக நிதியை ஒதுக்கக் கோருவதாக மட்டுமே இருக்க வேண்டும். இந்தச் சட்டத்தை பலவீனப்படுத்துவது, மக்களுக்கு இது தொடர்பாக அளித்த உறுதிமொழியை மீறுவதாகிவிடும்!

SCROLL FOR NEXT