வங்கிகளில் தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறது. அத்துடன், ஏடிஎம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதும் ஒரு சுமையாகவே விமர்சிக்கப்படுகிறது.
திருமணமோ, மருத்துவமோ முக்கியமான செலவுகளுக்குப் பெரும்பாலானோருக்குக் கைகொடுப்பது நகைக்கடன்தான். மக்கள் தங்களுடைய நகைகளுக்கு ஈடாக வங்கி நிர்ணயிக்கும் பணத்தை மிகக் குறுகிய நேரத்தில் பெற முடிவதும் அரசு வங்கிகளில் அதற்குக் குறைந்த வட்டி செலுத்தினால் போதும் என்கிற நிலையும் நகைக்கடனை நாடவைக்கின்றன.
வட்டியை மட்டும் செலுத்தி மறுஅடகு வைக்க முடிவது மிகப் பெரிய வசதி. ஆர்பிஐயின் புதிய விதிமுறையின்படி, இனி அசலையும் செலுத்தினால்தான் மறுஅடகு வைக்க முடியும். மேலும், நகையின் உரிமையாளர், அவரது பொருளாதாரப் பின்புலம், அடகு வைப்பதற்கான காரணம் போன்றவையும் தெரிவிக்கப்பட வேண்டும். நகைக்கடன் முறையில் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து ரிசர்வ் வங்கி தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
குறிப்பாக, சில ‘வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள்’ (என்பிஎஃப்சி), நகை மதிப்பில் 75%க்கு மேல் கடன் கொடுப்பது, கடன் பெறுவோரின் உரிமைகளுக்கு எதிராக நகைகளை ஏலம் விடுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவது தணிக்கை மூலம் தெரியவந்தது. வணிக அறமில்லாத நடைமுறைகள்தான் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்குக் காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். வங்கிகளின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் நகைக் கடன் 300% மேல் அதிகரித்துள்ளது எனவும் ஆண்டுதோறும் 22% பெண்கள் நகைக் கடனாளியாக மாறுகின்றனர் எனவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் விமர்சித்திருந்தார். குறிப்பாக, கிராமப்புற மக்களின் வருமானம் மிகவும் குறைந்திருப்பதன் ஒரு விளைவாகவும் நகைக்கடன்களின் பெருக்கம் கருதப்படுகிறது. எனினும், சில தனியார் நிறுவனங்கள் செய்யும் தவறுகளுக்காக நகைக்கடன் பெறுவதை இவ்வளவு கடினமாக்க வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது. இந்தப் புதிய நடைமுறை மக்களைக் கந்துவட்டிக்காரர்களை நோக்கியே தள்ளும்.
இதனிடையே, கூடுதல் ஏடிஎம் பயன்பாட்டுக்கு இரண்டு ரூபாயும் பண இருப்பை அறிந்துகொள்வதற்கு ஒரு ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2019-24 வரையான நிதியாண்டுகளில் எஸ்பிஐ தவிர, பிற அரசு வங்கிகள் அனைத்துமே ஏடிஎம் சேவையில் நஷ்டத்தையே சந்தித்துள்ளன. ஏடிஎம் கட்டணம் 2014க்குப் பின்னர், 2022இல்தான் உயர்த்தப்பட்டது.
ஏடிஎம் சேவையில் இழப்பைச் சரிக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் வங்கிகள் இருக்கின்றனதான். எனினும், மக்கள் செலுத்தும் கட்டணத்துக்கு ஈடுகட்டும் வகையில் ஏடிஎம் சேவையின் தரம் இல்லை என்பதும் உண்மை. தங்கள் வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பணம் எடுக்க முடியாதவர்களும் மின்னணுப் பரிவர்த்தனை முறைக்கு மாறாதவர்களும் பெரும் எண்ணிக்கையில் இருக்கும்போது, அவர்களுக்குக் கட்டண உயர்வானது சிரமத்தையே ஏற்படுத்தும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கித் துறையில் 16,35,000 கோடி ரூபாய் மதிப்புக்கு முறையற்ற கடன்கள் (செயல்படாத சொத்துகள்) உள்ளன. கடன் பெறுவோரின் பின்னணி, நோக்கம் குறித்துப் போதுமான அளவுக்கு அறிந்துகொள்ளத் தவறுவது, அவரது சொத்து விவரங்களைக் கண்காணிக்காமல் இருப்பது போன்றவை இந்தச் சிக்கலுக்குக் குறிப்பிடத்தக்க காரணங்கள்.
செல்வாக்குமிக்க நபர்களும் பெருநிறுவனங்களும் அரசு வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்தாமல் இருக்க முடிவது, வங்கிகளின் நேர்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. மிகப்பெரிய இழப்புகளைச் சரிசெய்வதன் மூலம், ஏழை எளியவர்களைப் பாதிக்கும் முடிவுகளை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும்.