மீண்டும் பதிப்பாளர்கள் மத்தியில் பொது நூலகத் துறை பேச்சாகிவருவதைப் பார்க்க முடிகிறது. பதிப்பாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் உருவாகிவந்திருக்கும் இடைவெளிக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு. பல ஆண்டுகள் நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலே நடத்தப்படாமல் இருப்பது, திடீரென்று கொள்முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டால் கூடவே லஞ்ச பேரக் குற்றச்சாட்டுகளும் உருவாவது என்பது தமிழகத்தில் அவ்வப்போது நடப்பது சலிப்படைய வைக்கிறது.
பதிப்புத் துறை மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தில் இருக்கிறது. இணையம் வழி ஒட்டுமொத்த உலகுக்கும் இணையான ஒரு மெய்நிகர் உலகை செல்பேசி கொடுத்துவருகிற இந்த நாட்களில் எல்லா நாடுகளிலுமே பதிப்புத் துறை ஒரு பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. படிப்பைத் தாண்டி வாசிப்புக்காகப் புத்தகங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பது என்பது இன்னும் கோடிக்கணக்கான மக்களை எட்டியிராததாகவே நம்மைப் போன்ற நாடுகளில் இருக்கிறது. ஒருவகையில் அரசு செய்ய வேண்டிய பணியைப் பதிப்புத் துறையினர் செய்கிறார்கள் எனலாம். மிகப் பெரிய அறிவியக்க வளர்ச்சிப் பணி இது. ஒரு புத்தகத்தை உருவாக்கி விற்பவர் கிட்டத்தட்ட பள்ளிக்கூடத்துக்கு இணையான காரியத்தைச் செய்கிறார். அவரை ஆதரிக்க வேண்டியது அரசின் கடமை.
புத்தகங்களை அச்சிடுவதற்கான காகிதங்களின் விலை உயர்வு, அச்சுக் கூலி உயர்வு, ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு என்று ஆண்டுதோறும் செலவீனம் அதிகரித்தபடியே இருந்தாலும் புத்தக வாசிப்பை அவர்களால் இந்த வேகத்தில் உயர்த்த முடியவில்லை என்பதுதான் உண்மை. இத்தகைய சூழலில் பொது நூலகங்களுக்காக அரசு நடத்தும் கொள்முதலானது பதிப்பாளர்களுக்குப் பெரிய ஊன்றுகோல். ஆனால், அங்கும் கோளாறு நடக்கிறது என்று வெளிவரும் செய்திகள் நல்லதல்ல. ‘ஒரு ஃபாரம் ரூ.5’ என்று அளவீடு வைத்துக்கொண்டு புத்தகங்களை எடைக்கு வாங்குவதுபோல வாங்கும் அணுகுமுறையும் சரியானது அல்ல.
புத்தகங்களை அறிவாயுதமாகக் கருதும் ஒரு குழு அமைக்கப்பட்டு, சாய்வுகளுக்கு அப்பாற்பட்டு நல்ல புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். முழுக்க இது புத்தகத் தரத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும். லஞ்ச பேரங்களுக்கு இதில் இடம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. மேலும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப புத்தகங்களை வாங்கும் விலை நிர்ணயத்தில் மாற்றம் செய்யப்படவும் வேண்டும். குறைந்தது மூன்று மடங்கு விலை உயர்வைக் கோருகிறார்கள் பதிப்பாளர்கள். அதிலுள்ள நியாயம் பரிசீலிக்கப்பட வேண்டும்.
நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்கள் என்பது நூற்றுக்கணக்கானவர்கள் எடுத்துப் படித்துப் பயன் பெற வேண்டியவை. தலைமுறைகள் தாண்டியும் பாதுகாக்கப்பட வேண்டியவை. அறிவுக் கொள்முதல் என்ற பிரக்ஞையோடு புத்தகக் கொள்முதல் நடக்க வேண்டும்!