வத்தலகுண்டு அருகே புதிதாகத் திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. சுங்கச்சாவடிகள் தொடர்பாகத் தமிழகத்தில் எதிர்ப்புணர்வு அதிகரித்துக்கொண்டே செல்வதற்குச் சமீபத்திய சாட்சியமாக இந்தச் சம்பவம் அமைந்திருக்கிறது. திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்லும் வழியில் செம்பட்டி - வத்தலகுண்டு இடையே தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.
நான்கு வழிச் சாலைப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், சுங்கச்சாவடியைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரக் கூடாது என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்திவந்த நிலையில், மார்ச் 12இல் அந்தச் சுங்கச்சாவடி செயல்படத் தொடங்கியது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதுடன் சுங்கச்சாவடியையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, 250க்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்திருக்கின்றனர். இப்படியான சம்பவங்கள் புதிதல்ல. சுங்கச்சாவடிகளால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கருதும் மக்கள் அவற்றுக்கு எதிராக முறையிடுகிறார்கள். புகார்களைப் பதிவுசெய்கிறார்கள்; அதற்குப் பலன் இல்லாதபட்சத்தில், நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்துகிறார்கள். இதனால், சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படுவதும். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்படுவதும் தொடர்கதையாகிவிட்டன.
வணிகத்தைப் போல ஆண்டுதோறும் சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்வதாக வணிகர் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. அதிகம் செலவாகும் என்பதால், சுங்கச்சாவடி அமைந்திருக்கும் பகுதிகளில் தொழில் நிறுவனங்களைத் தொடரத் தொழில்முனைவோர் தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
பல்வேறு சுங்கச்சாவடிகள் காலாவதியான பின்னரும் இயங்குவதாகப் புகார்கள் உண்டு. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைந்திருக்கும் இடத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவில் வசிக்கும் மக்கள் சென்று வர மாதாந்திர அடிப்படையில் பாஸ் வழங்குவதற்கு விதிமுறையில் இடம் உண்டு. ஆனால், அதுவும் பல சுங்கச்சாவடிகளில் பின்பற்றப்படுவதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
சுங்கச்சாவடிகள் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளும் தீர்ப்புகளும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய திசைவழியைக் காட்டுகின்றன. தேசிய நெடுஞ்சாலையின் அதே பகுதியில் அதே திசையில் ஏற்கெனவே ஒரு சுங்கச்சாவடி இருக்கும்போது, 60 கி.மீ. தூரத்துக்குள் மற்றொரு சுங்கச்சாவடி நிறுவப்படக் கூடாது என்பது விதி.
சிவகங்கை மாவட்டத்தின் செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் லெம்பலக்குடியில் மற்றொரு சுங்கச்சாவடி இருந்தது. இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், லெம்பலக்குடி சுங்கச்சாவடியை மாற்ற உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, செண்பகம் பேட்டையில் சுங்கச்சாவடி தொடர்ந்து இயங்கும் என உத்தரவிட்டது. இது ஓர் உதாரணம்தான்.
நெடுஞ்சாலைகள் விஸ்தரிப்பு, சாலைகள் பராமரிப்பு, தரமான கட்டமைப்பு போன்றவற்றுக்குச் சுங்கக் கட்டணம் அவசியம் என மத்திய அரசு கருதுகிறது. இன்னொரு புறம், சுங்கச்சாவடிகளால் அதிருப்தி அடைந்திருப்பவர்கள் அவற்றை நிரந்தரமாக அகற்ற மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார்கள். நாட்டிலேயே அதிகமான சுங்கச்சாவடிகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. சுங்க வரி உயர்த்தப்படுவதால் அதிகமான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதும் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.
திருமங்கலம் நகராட்சியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் கப்பலூரில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் பேசிய தமிழகப் பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு மூன்று முறை கடிதம் எழுதியிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஆனால், சுங்கச்சாவடி விஷயத்தில் மாநிலங்களின் குரல்களுக்கு மத்திய அரசு செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. இதற்கிடையே, இனிச் சுங்கச்சாவடிகளில் பயன்பாட்டுக் கட்டணம் நிரந்தரமாக வசூலிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இப்படி சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் காட்டப்படும் ஈடுபாடு, மக்கள் படும் சிரமங்களுக்குச் செவிமடுப்பதிலும் காட்டப்பட வேண்டும்.