பின்லாந்தில் நடந்த, 20 வயதுக்கு உட்பட்டவர் களுக்கான இளையோர் பிரிவு உலக ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் ஹிமா தாஸ். தடங்களில் நடக்கும் ஓட்டப் பந்தயங்களைப் பொறுத்தவரை உலக அளவிலான போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் முதல் தங்கம் இது. தடகளப் போட்டிகளில் குறைந்த அனுபவமே கொண்டவர் என்றாலும், தனது அபாரத் திறமை, கடும் உழைப்பு மூலம் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார் ஹிமா தாஸ்.
அசாமில் உள்ள நகாவ் மாவட்டத்தின் டிங் கிராமத்தைச் சேர்ந்த ஹிமா, ஏழைக் குடும்பத்தில் ஆறு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர். தொடக்கத்தில் கால்பந்து விளையாட்டில் பங்கேற்றுவந்த ஹிமா, பின்னர்தான் தடகளப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிகளில்தான் அவர் முதலில் பங்கேற்றார். கடந்த ஏப்ரலில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில், 400 மீட்டர் தொலைவுக்கான ஓட்டப் பந்தயத்தை நிறைவுசெய்ய 53.21 விநாடிகள் எடுத்துக்கொண்ட அவர், நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் நடந்திருக்கும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இளையோர் பிரிவு உலகப் பந்தயத்தில் 51.13 விநாடிக்குள் ஓடி தங்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.
பல ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்குப் பிறகே சாத்தியப்படக்கூடிய இந்தச் சாதனையை 18 வயது ஹிமா தாஸ், மிகக் குறுகிய காலப் பயிற்சியில் சர்வ சாதாரணமாக நிகழ்த்தியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பந்தயத் தொலைவு முடிய இன்னும் 50 மீட்டர் இருக்கிறது எனும் நிலையில், அவருடன் ஓடிய அனைவரும் களைத்துவிட்டனர். ஆனால், களைப்பின் சுவடே இல்லாமல் மின்னல் வேகத்தில் ஓடி வென்றதுடன், இறுதிவரை துடிப்புடன் அவர் இருந்ததைப் பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது. இந்தப் பெண் அபூர்வமான ஆற்றல்மிக்கவரா என்று அனைவரும் அதிசயித்து நிற்கிறார்கள். “இதேரீதியில் போனால், இந்திய வீராங்கனை மஞ்சித் கௌர் நிகழ்த்திய 51.05 விநாடிகள் என்ற தேசியச் சாதனையை முறியடித்து, அடுத்த மாதம் ஆசியப் போட்டியின்போது 50 விநாடிக்கும் குறைவான நேரத்தில்கூடக் கடந்துவிடுவார்” என்று பி.டி.உஷா மகிழ்ச்சியும் பெருமையும் பொங்கப் பாராட்டியிருக்கிறார்.
விளையாட்டுத் திறமைகளைப் பயிற்சி மூலம் மேம்படுத்திக்கொள்வது இந்தியர்களுக்கு எளிதல்ல. வீரர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி எடுத்துக்கொண்டுவிட முடியாது. அப்படித்தான் இந்திய விளையாட்டுச் சூழல் இருக்கிறது. ஹிமா நிகழ்த்தியுள்ள சாதனை இந்த மரபுகளை உடைத்து நொறுக்கி, வருங்காலத்தில் மேலும் பலர் பதக்கம் பெறுவதற்கான தொடக்கமாக அமைந்திருக்கிறது.
இத்தகைய சாதனைகள் எல்லாம் இந்தியாவில் நம்முடைய அமைப்பின் சாகுபடியாக அல்ல; தனி மனித அசாத்தியர்களால் நிகழ்கின்றன எனும் உண்மைக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும்.