நம் நாட்டில் 19,500-க்கும் மேற்பட்ட மொழிகள், கிளை மொழிகள் தாய்மொழியாக பேச்சு வழக்கில் உள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் 19,569 மொழிகள், கிளை மொழிகள் தாய்மொழியாக பேச்சு வழக்கில் உள்ளது தெரியவந்துள்ளது. எனினும், 10 ஆயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் தாய்மொழிகள் 121 மட்டுமே. இவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 121 கோடி ஆகும்.
இதிலும் 22 மொழிகள் மட்டுமே அரசியல் சாசன சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 96.71 சதவீதம் பேர் இந்த 22 மொழிகளில் ஒன்றை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மற்ற 99 மொழிகள் 8-வது அட்டவணையில் இடம்பெறாத மொழிகளாக கருதப்படுகின்றன. மீதம் உள்ள மொழிகளை பேசுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளது.
அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடா, காஷ்மிரி, கொங்கனி, மலையாளம், மணிபுரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, போடோ, சந்தலி, மைதிலி மற்றும் டோக்ரி ஆகியவை 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகள் ஆகும்.
இதில் 14 மொழிகள் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோதே இடம்பெற்றிருந்தன. 1967-ல் ஒரு மொழியும், 1992-ல் 3 மொழிகளும், 2004-ல் 4 மொழிகளும் சேர்க்கப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.