தலையங்கம்

ஊட்டச்சத்துள்ள உணவு அனைவருக்கும் கிடைப்பதே அரசுக்கு அழகு!

செய்திப்பிரிவு

நா சபையின் ‘உணவுப் பாதுகாப்பு - ஊட்டச்சத்து’ தொடர்பான 2017-ம் ஆண்டு உலக அறிக்கை வெளியாகி யிருக்கும் நிலையில், ஊட்டச்சத்துக் கொள்கையைச் சீர்திருத்துவது குறித்து இந்தியா சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு, மேலதிக ஊட்டச்சத்து தொடர்பாகக் கடந்த 18 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளுக்குப் புதிய ஆபத்துகள் வந்திருப்பதாக, உலக அளவில் தரவுகளைத் திரட்டிய ஐந்து முகமைகள் எச்சரிக்கின்றன. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதிலும் இந்தியா தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலமே அனைவருக்கும் உணவு தானியங்களை வழங்குகிறது இந்தியா. அத்துடன் ஊட்டச்சத்துள்ள உணவையும் தருகிறது. மகளிர் அதிலும் குறிப்பாக கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோரின் நலனுக்கு சிறப்பு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்படுகிறது. அப்படி அளித்தும் மக்கள் தொகையில் 14.5% பேர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் 53% பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் பொது விநியோக முறை தொடர் பாக 3,888 புகார்கள் மட்டுமே பெறப்பட்டன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதிலிருந்து ஊட்டச்சத்துக் குறைவைப் போக்க மத்திய - மாநில அரசுகளுக்கு ஆர்வமில்லை என்பது புலனாகிறது.

உலக அளவில், 2000-க்குப் பிறகு, பட்டினியையும் ஊட்டச்சத்துக் குறைவையும் எதிர்கொள்ளும் மக்களுடைய எண்ணிக்கை அதிகம் என்றாலும், சத்துக்குறைபாட்டால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. அதற்குக் காரணம் ‘அனை வருக்கும் உணவு’ என்ற திட்டத்தின்கீழ் பொது விநியோகத் திட்டத்தில் வறியவர்களுக்குக்கூட மிகக் குறைந்த விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் வழங்கப்பட்டதுதான். ஆனால் 2013-க்குப் பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. 2016-ல் கவலைப்படத்தக்க அளவுக்கு, ஊட்டச்சத்துள்ள உணவை உண்போர் எண்ணிக்கை குறைந்தது. உலகில் 2014-ல் 77.50 கோடிப் பேர் உணவு கிடைக்காமல் திண்டாடினர். 2016-ல் அந்த எண்ணிக்கை 81.50 கோடியாகிவிட்டது. பருவநிலை மாறுதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், வறட்சிக்கு ஆளான நாடுகளிலும் வசிப்போர்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு குழந்தைகள் ஊட்டச்சத்தால் பாதிக்கப்படுவது எண்ணிக்கையில் குறைந்தாலும், நான்கில் ஒரு குழந்தை இன்னமும் போதிய உயரம் வளராமல் குட்டையாகவே இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மாநில உணவு ஆணையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஊட்டச்சத்து விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பார்க்க முடியவில்லை. ஊட்டச்சத்துள்ள உணவு அனைத்துத் தரப்பினரையும் சென்று சேர வேண்டியது அரசியல் அவசியம் என்பது உணரப்படவில்லை. மானிய விலையை நம்பியுள்ள ஏழைகள் ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறுவதற்குப் பொது விநியோகத் திட்டத்தில் என்ன மேம்பாடு செய்யலாம் என்று யோசிக்க வேண்டிய தருணம் இது. அனைவருமே அரிசி அல்லது கோதுமையுடன் ஊட்டச்சத்துள்ள உணவையும் பெற வேண்டும் என்பதையே அரசு லட்சியமாகக் கொள்ள வேண்டும். உணவுக் கொள்கையில் உரிய மாற்றங்கள் செய்வதே, தீர்வை நோக்கி இட்டுச்செல்லும்!

SCROLL FOR NEXT