தலையங்கம்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைப்பது எப்போது?

செய்திப்பிரிவு

ஜூ

ன் 1 முதல் ‘கிராமங்களின் வேலைநிறுத்தம்’ என்ற போராட்டத்தை 130-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் கூட்டாக நடத்திவருகின்றன. காய்கறிகளையும் தானியங்களையும் பாலையும் தேசிய நெடுஞ்சாலைகளில் கொட்டி, விவசாயிகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். இறுதி நாளான ஜூன் 10 அன்று ‘பாரத் பந்த்’ நடத்தவும் அழைப்புவிடுத்துள்ளனர். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி, வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை அதிகப்படுத்த வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்ய வேண்டும் என்பவை முக்கியமான கோரிக்கைகள்.

விவசாயிகளின் கோரிக்கைகளில் எதுவுமே புதியவை அல்ல. பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாலும் அரைகுறையாகச் சில முயற்சிகளை எடுப்பதாலும் விவசாயிகள் அணிதிரண்டு இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்பு தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகியவற்றில் விவசாயிகள் பலமான கிளர்ச்சிகளை நடத்தினர். மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் 200 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்று தலைநகர் மும்பையில் முதல்வர் பட்னவீஸைச் சந்தித்துத் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்தனர். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதி தந்த பாஜக கூட்டணி, அதில் ஒரு பங்கு வருமானத்தைக்கூடச் சரியாகத் தர நடவடிக்கை எடுக்கவில்லை.

காய்கறிகள் நீங்கலாக ஏனைய வேளாண் விளைபொருட்களின் விலை 2018-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 0.55% மட்டுமே உயர்ந்தது. 2014 முதல் 2016 வரையில் முதல் நான்கு மாதங்களில் இதற்கு முன்னர் இருந்த விலைவாசி உயர்வுடன் (2%) ஒப்பிட்டால் இது வெறும் கால்வாசிதான். விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்ட உணவு தானியங்கள், காய்கறிகள் முழுதாகக் கொள்முதல் செய்யப்படாமல் அல்லது விற்கப்படாமல் விவசாயிகளிடத்திலேயே தேங்கியுள்ளன. இந்த ஆண்டு பருவ மழையும், விளைச்சலும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளைச்சல் அதிகரித்தால் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விலை குறைவாக வைத்துத்தான் வியாபாரிகளுக்கு விற்க முடியும். இது மேலும் வருவாய் இழப்பையே ஏற்படுத்தும்.

கரும்பு சாகுபடியாளர்கள் சர்க்கரை ஆலைகளுக்கு விற்ற கரும்புக்குப் பணம் கிடைக்காமல் கடும் நிதி நெருக்கடியில் ஆழ்ந்துள்ளனர். உணவு பதப்படுத்தல் துறையை வலுப்படுத்து வதில்கூட அரசு மெத்தனமாகவே செயல்படுகிறது. இத்துறையில் 100% அந்நிய முதலீட்டுக்குக் கதவைத் திறந்துவிட்டும் வளர்ச்சி ஏற்படவில்லை. வேலைநிறுத்தம் நடந்தால், அதை நடத்துகிறவர்களைக் குறை சொல்வது எளிது. ஒவ்வொரு பிரச்சினையையும் உரியவர்களிடம் ஆலோசனை கலந்து உடனுக்குடன் பொதுக் கொள்கை மூலம் தீர்வு காண்பதே அரசுக்கு நல்லது.

SCROLL FOR NEXT