தலையங்கம்

வங்கி நிர்வாக நடைமுறை: ரிசர்வ் வங்கியின் தயக்கம் உடையட்டும்!

செய்திப்பிரிவு

ங்கிகளின் வட்டி விகிதம், பொருளாதார வளர்ச்சி யைத் தூண்டும் வகையில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய முடியாத நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி இருக்கிறது என்ற செய்தி ஏமாற்றம் தருகிறது. “ஒவ்வொரு வங்கியும் அவற்றின் ரொக்கக் கையிருப்பு, வாடிக்கையாளர்களின் தேவை ஆகியவற்றுக்கேற்ப வட்டி யைச் சுயமாக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். 2018 ஏப்ரல் முதல் இது அமலுக்கு வர வேண்டும்” என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறியிருந்தது ரிசர்வ் வங்கி. இன்னமும் இது நடைமுறைக்கு வரவில்லை. இதனால், ஏற்பட்டிருக்கும் இழப்புகள் கணிசமானவை.

ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவின்படி பாரத ஸ்டேட் வங்கி வசூலிக்கும் வட்டி 8.7%. பாரத ஸ்டேட் வங்கியே தனக்குரிய வட்டியை நிர்ணயிக்கும் முறையைக் கடைப்பிடித்திருந்தால் வட்டி 8.25% ஆகத்தான் இருந்திருக்கும். இந்த, 0.45% வேறுபாடானது வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, அதுவும் மாதாந்திர தவணைகளில் கடனை அடைப்பவர் களுக்குப் பெரிய நிவாரணமாக இருக்கும். இதுவரை வங்கி கள் கொடுத்த கடன்கள், வசூலாகாமல் நிலுவையில் உள்ள கடன்கள் என்று அனைத்துமே ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் வட்டி வீதத்தை அடிப்படையாகக் கொண்டவைதான்.

வட்டி விஷயத்தில், வங்கிகள் தயங்குவதற்குக் காரணம் இருக்கிறது. வாராக் கடன்களின் அளவு அதிகரிப்பு, தேவைக்கேற்பக் கடன் வழங்க நிதி போதாமை, பிற வங்கிகளிடமிருந்து எழும் போட்டி, வங்கியல்லாத துறைகள் தரும் போட்டி என்று பல காரணங்களால் தங்களுடைய இழப்பைக் குறைக்கவும் வருவாயைப் பெருக்கவும் வங்கிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்கின்றன. வட்டி வீதங்களைச் சிறிய அளவு குறைத்தாலும்கூட வருவாய் இழப்பு ஏற்படும். அது வரவு- செலவுப் பற்றுவரவில் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் வங்கிகளுக்கு உண்டு. ஆனால், இவ்விஷயத் தில் ரிசர்வ் வங்கி தயங்கத் தேவையில்லை. உரிய நேரத்தில் இதை வங்கிகள் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

எல்லா வங்கிகளும் இந்த இழப்பை இப்போது சந்திக்கத் தயாரில்லை. அடிப்படை வட்டி வீதத்தைப் பழைய வாடிக்கையாளர்கள் செலுத்தும்போது புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளின் வட்டி வீதத்தை அமல்செய்வதிலும் பிரச்சினை கள் ஏற்படும். இப்படி மாறுவதற்குக் குறிப்பிட்ட கட்டணத்தைப் புதிய வாடிக்கையாளர்களிடம் வசூலித்துக்கொள்ளலாம். எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் அந்தந்த வங்கிகளே வட்டியை நிர்ணயிக்கும் நடைமுறை இருந்தது. அதை ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் அடிப்படை வட்டி வீதத்துக்கு மாற சில சலுகை கள் அளிக்கப்பட்டன. வாராக்கடன் சுழலில் சிக்கியிருக்கும் வங்கிகள், வட்டி வீதத்தைச் சுயமாக நிர்ணயித்துக் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பது எளிதல்ல. ஆனால், புதிய முதலீடுகளும் நுகர்வும் வளர இந்தத் தேக்க நிலையி லிருந்து விடுபட்டாக வேண்டும். அது ரிசர்வ் வங்கியின் கைகளில்தான் இருக்கிறது!

SCROLL FOR NEXT