தலையங்கம்

அரசியல் களத்தில் எதிர்கொள்ளப்பட வேண்டியது ரஜினியின் அரசியல்!

செய்திப்பிரிவு

ஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘காலா’ படத்தை திரையிடுவதற்கான தடைக்காக உருவாக்கப்படும் சூழல் ஆபத்தானது. கர்நாடகத்தில் இந்தப் படம் திரையிடுவதைத் தடுப்போம் என்று சில கன்னட அமைப்புகள் தெரிவித்ததை அடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தகக் கழகமும் அதற்கேற்ப பேசியது. கர்நாடக உயர் நீதிமன்றம் இப்போது இதில் தலையிட்டிருக்கிறது. அடுத்து, தமிழ்நாட்டிலும் அப்படியான சமிக்ஞைகள் தென்படுகின்றன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது பற்றி ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழகத்தில் கடுமையான அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. தூத்துக்குடி சென்றவர் அங்கே காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனங்களைத் தெரிவிக்கவில்லை. “99 நாட்கள் அறப்போராட்டத்தில் மக்கள் உட்கார்ந்திருந்த நாட்களில் ஆட்சியாளர்கள் யாரும் போய் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாதது குறித்துப் பேசவில்லை. ஆனால், நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து ரஜினி குற்றஞ்சாட்டினார்” என்பது பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டாக மாறியது. இதையொட்டி தீவிரமான விவாதங்கள் எழுந்தன. அவற்றினூடாக சமூக வலைதளங்களில் “ரஜினி நடித்து வெளிவரும் ‘காலா’ படத்தை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும்; இல்லை கூடாது இது பல கலைஞர்களின் பங்களிப்பு” என்று பலவிதமான கருத்துகள் பேசப்பட்டன. இதுவரையிலான யாவும் ஜனநாயக எல்லைக்கு உட்பட்டவை. புதிதாகக் கிளம்பும் தடை கோரிக்கைகள் ஜனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் விரோதமானவை.

சென்னை உயர் நீதிமன்றத்திலும், முதல்வரின் தனிப் பிரிவிலும் ‘காலா’ படத்தில் ரஜினி நடித்துள்ள கதாபாத்திரம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகத் தெரிகிறது என்ற அடிப்படையில் அப்படத்துக்குத் தடை கோரி மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வழக் கின் தன்மை, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்புக்கு எந்த வகையிலும் குறைவானது அல்ல.

ரஜினியின் அரசியல் கருத்துகளுக்காகவோ, அந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் தொடர்பான சித்தரிப்புக்காகவோ ‘காலா’ படத்தை ஒரு ரசிகர் புறக்கணிக்க வேண்டுமா, கூடாதா என்பது ரசிகர்களுக்குள்ள உரிமை. எந்தவொரு கலைப் படைப்பையும் அது என்ன சொல்லவருகிறது என்று தெரியாமல் யூகங்களின் அடிப்படையில் முன்கூட்டியே தடைகளை விதிக்கக் கோருவதும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் பாசிஸத்தின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். படத்தை வெளியிடவே கூடாது என்று அழுத்தம் கொடுப்பதன் வாயிலாக மொழி, சாதி என்று பாகுபாட்டு உணர்ச்சிகளை வளர்த்தெடுப்பது கண்டிக்கத்தக்கது. ‘காலா’ படத்தைத் திரையிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் களைந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் கடமை!

SCROLL FOR NEXT