தலையங்கம்

ஷுஜாத் புகாரி படுகொலை அமைதியைக் குலைக்கும் முயற்சி!

செய்திப்பிரிவு

மூ

த்த பத்திரிகையாளரும் ‘ரைசிங் காஷ்மீர்’ ஆசிரியரு மான ஷுஜாத் புகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சிதருகிறது. இச்சம்பவத்தில் அவரது பாதுகாவலர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தெளிவான சிந்தனையுடன் செயல்பட்ட புகாரி, ‘தி இந்து’ஆங்கில நாளிதழின் நிருபராகவும் காஷ்மீர் நிலவரம் குறித்து மிகச் சிறப்பான செய்திகளை அளித்துவந்தவர். காஷ்மீரிகளின் நல்லெண்ணத்தை மீட்கும் வகையில் போர் நிறுத்த நடவடிக்கையை அறிவித்த மத்திய அரசு, ரம்ஜான் முடிந்த பிறகும் அதை மேலும் நீட்டித்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே, பயங்கர வாதிகள் இந்தப் படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இச்சம்பவத்துக்கு முதல் நாள்தான், புல்வாமா மாவட்டத்தில், ரம்ஜானைக் கொண்டாடச் சென்ற அவுரங்கஜீப் என்ற ராணுவ வீரர் கடத்திக் கொல்லப்பட்டார். அதற்கும் முன்னதாக அதே மாவட்டத்தில் இரண்டு காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் மத்திய - மாநில அரசுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் விடுக்கப்படும் சவால்களாகும். ‘தாக்குதல் நிறுத்தம் வேண்டும், பேச்சு நடத்த வேண்டும்’ என்று முதல்வர் மெஹ்பூபா முஃப்தி கோரிவருகிறார். இந்நிலையில், இதுபோன்ற படுகொலைகளைப் பயங் கரவாதிகள் அரங்கேற்றிவருகிறார்கள். இதற்கிடையே, ரம்ஜான் தொழுகை காலத்தில், அமைதியைக் கொண்டுவரும் நோக்கில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திவைத்திருந்த அரசு, அது மீண்டும் தொடரும் என்று அறிவித்திருக்கிறது.

புகாரியின் படுகொலையானது நாட்டில் இப்போது நிருபர்களுக் கும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் பல மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்கும் உயிர் அச்சத்தை உணர்த்துவதாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு கர்நாடகத்தில் கௌரி லங்கேஷும் திரிபுராவில் சாந்தனு பவுமிக்கும் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு முன்னர் 2006-ல் புகாரியைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்கள் தந்த தொல்லைகளையெல்லாம் தீரத்துடன் அவர் எதிர்கொண்டார். அதன் பிறகுதான் ஆயுதம் தாங்கிய இரண்டு மெய்க்காவலர்கள் அவருக்குப் பாதுகாப்புக்குத் தரப்பட்டனர்.

பத்திரிகையாளர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது, வேறு யாராலும் அவர்களுடைய பணியைச் செய்ய முடியாது. காஷ்மீர் விவகாரத்தில் வெவ்வேறு தரப்பினர், வெவ்வேறு நோக்கங்களுடனும் சித்தாந்தங்களுடனும் எதிரெதிராகச் செயல்பட்டுவருகின்றனர். நேர்மையான, நடுநிலையான பத்திரிகையாளர்கள் மட்டுமே, அமைதி திரும்ப அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன, அரசின் செயல்கள் குறித்து மக்களுக்குள்ள அதிருப்திகள் என்ன என்று தெளிவாகத் தெரிவித்துவருகின்றனர். இந்தப் பின்னூட்டங் கள் இல்லாமல் அரசால் தெளிவான, மக்கள் ஏற்கும்படியான முடிவுகளை எடுக்க முடியாது. பத்திரிகையாளர்கள் தரும் தகவல்களைப் பிரிவினைவாதிகள் மட்டுமல்ல, தேசியவாதிகளும்கூட பல சந்தர்ப்பங்களில் விரும்புவதில்லை. இந்நிலையில், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள அரசு உறுதியுடன் செயலாற்ற வேண்டும்!

SCROLL FOR NEXT