தலையங்கம்

மக்களிடம் செல்லுங்கள்.. அதற்காகத்தான் அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள்!

செய்திப்பிரிவு

மிழக அரசு ‘பசுமைச் சாலை’ என்ற பெயரில் அறிவித் திருக்கும் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைக்கான திட்டப் பணிகளை ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவரும் அணுகுமுறை கடுமையான அதிருப்தியை உருவாக்கு வதோடு, கடுமையான கண்டனத்துக்குரியதாகவும் இருக்கிறது. “இப்படியான திட்டங்கள் தேவையா-இல்லையா” என்பது தனித்த விவாதத்துக்கு உரியது. மக்களுக்கான திட்டம் என்றாலும்கூட அதைச் செயல்படுத்த வேண்டிய அணுகுமுறை இதுவல்ல.

மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட வேகத்தில், மக்களிடமிருந்து வரவேற்பு வெளிப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், ஏனைய மாவட்ட மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தங்களூரில் இந்த மருத்துவமனை அமையாமல் போய்விட்டதே என்று வருந்துகிறார்கள் - வெளிப்படையாகப் பேசுகிறார்கள். ஆனால், எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ஊர் எல்லைக்கு அப்பாற்பட்டு எதிர்க் கிறார்கள். இரண்டு திட்டங்களுக்குமே நிலம் வேண்டும். ஆனால், ஒன்றை ஆதரிக்கிறார்கள்; இன்னொன்றை எதிர்க்கிறார்கள்.. ஏன்? மருத்துவமனைத் திட்டத்தின் பலன் தங்களுக்கானது என்பதை நேரடியாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பிரமாண்ட சாலைகள் அப்படி அல்ல என்ற எண்ணம் அவர்களிடம் இருக் கிறது. இரண்டிலுமே அவர்களுடைய கடந்த கால அனுபவம் தாக்கம் செலுத்துகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

மக்களிடம் ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன. அதைத் தீர்ப்பது அரசின் கடமை. மக்கள் கருத்துக்கேற்பவே எந்தத் திட்ட மும் நிறைவேற்றப்பட வேண்டும். திட்டங்களை நிறைவேற்ற இந்திய அரசு சொல்லும் வழிமுறைகளும் இதைக் கவனத்தில் கொண்டிருக்கின்றன. மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் என்ற முறைமை அதன் நிமித்தமே உருவாக்கப்பட்டிருக்கிறது. மக்கள் எதிர்க்கிறார்கள் என்றால், அரசு அவர்களிடம் பேச வேண்டும். மக்களின் சந்தேகங்களை ஆட்சியாளர்கள் போக்க வேண்டும். அதுதான் முறை. ஆனால், காவல் துறையைப் பயன்படுத்தி திட்டத்தை விமர்சிப்போர், எதிர்ப்போர் ஒவ்வொருவரையும் கைதுசெய்து, வாயை அடைத்துவிட எத்தனிக்கிறது தமிழக அரசு. யதேச்சதிகரமான போக்கு இது. இந்த விஷயத்தில் மக்களின் எதிர்ப்பை உணர்த்த மத்திய அரசு குறுக்கே தலையிட்டு, மாநில அரசிடம் மக்கள் கருத்தைக் கேட்கச் சொல்லியிருப்பது மக்களிட மிருந்து இன்றைக்கு மாநில அரசு எவ்வளவு அந்நியப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கான ஓர் உதாரணம்.

மக்கள் போராட்டங்கள் வெறுமனே எதிர்ப்பை மட்டுமே வெளிப்படுத்துவன அல்ல; மக்களின் நம்பிக்கையும் அவற்றில் இருக்கிறது - தங்களது கோரிக்கைகளை உரிய முறையில் கவனப்படுத்தினால் அரசு அதைப் பரிசீலிக்கும் என்ற அந்த நம்பிக்கைதான் மக்களுக்கும் அரசுக்குமான உறவின் பிணைப்பும்கூட. அதை ஒரு அரசு கைதுகளின் வழியாக அணுகும்போது, அரசுக்கும் மக்களுக்குமான பரஸ்பர நம்பிக்கை அற்றுப்போகிறது. மக்கள் நம்பிக்கையை இழக்கும் ஆட்சியாளர்களின் ஆட்சி என்னவாகும் என்பதற்கு வரலாறு நெடுகிலும் சான்றுகள் இருக்கின்றன!

SCROLL FOR NEXT