கா
ஷ்மீரில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடரும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு சமீபத்தில் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. காஷ்மீரில் அமைதி நீடிக்க அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாடு, பாகிஸ்தான் ஆகியவற்றுடனும் பேச தயார் என்று அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். பயங்கரவாதச் செயல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையோடு, பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த ஒரு வாரத்துக்குப் பிறகு தனது ‘மென்மையான காஷ்மீர் கொள்கை’யை அரசு வெளிக்காட்டியிருக்கிறது.
தாக்குதல் நிறுத்த நடவடிக்கைகளை மேலும் நீடிக்கலாம் என்று தரைப்படையின் தலைமை தளபதி விபின் ராவத் அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. ‘ஆபரேஷன் ஆல்-அவுட்’ என்ற பெயரில் அவர் எடுத்த நடவடிக்கையால் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால், 230-க்கும் மேற்பட்ட காஷ்மீர இளைஞர்கள் தீவிரவாதிகளின் படைகளில் புதிதாகச் சேர்ந்தனர் என்பது கவனத்துக்குரியது.
சில மாதங்களுக்கு முன்னால் காஷ்மீர் மாநில நிலைமையைப் பரிசீலித்த மோடி அரசு, தனது கொள்கையில் பெரும் மாறுதலைச் செய்துபார்க்க முடிவெடுத்தது. காஷ்மீரத்தின் அனைத்துத் தரப்பு மக்களுடனும் சமரசம் பேசவும் அவர்களுடைய எண்ணம் எதுவென்று அறியவும் தினேஷ்வர் சர்மா, மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். அவருடைய ஆலோசனைப்படி, பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கல் வீசிய இளைஞர்களுக்கும் சிறார்களுக்கும் ‘பொது மன்னிப்பு’ வழங்கப்பட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையைப் பாதுகாப்புப் படைகள் நிறுத்தின. அடுத்த கட்டமாக காஷ்மீருக்கு வந்த பிரதமர் சில வளர்ச்சித் திட்ட நடவடிக்கைகளைத் தொடங்கிவைத்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வது பலனளிக்கும்.
காஷ்மீர் மக்களுடைய அன்றாட வாழ்க்கையை முடக்கும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விலக்கிக்கொள்ள வேண்டும். இணையதள சேவைகளைத் தாற்காலிகமாக நிறுத்திவைப்பதைக் கைவிட வேண்டும். தீவிரவாதிகளுடன் மட்டுமின்றி பாகிஸ்தானுடனும் போர் நிறுத்தம் வலுப்பட வேண்டும். எல்லைக்கு அப்பாலிருக்கும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் இது தொடர்பாகப் பேச வேண்டும். போர் நிறுத்த காலத்தில் விஷமிகள் எல்லைக்கு அருகில் ஆயுதங்களுடன் வந்து குவிவதற்கோ, தாக்குவதற்கோ இடம்தராமல் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
காஷ்மீரில் அமைதி திரும்பவும், தாங்கள் தனித்து விடப்படுகிறோம் என்ற எண்ணம் காஷ்மீரிகளுக்குத் தோன்றாமல் இருக்கவும் அவர்களை முழுமையாக அரவணைக்கும் செயல்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இப்போதைக்கு சமாதானத்துக்கான சாளரம்தான் திறக்கப்பட்டிருக்கிறது. தலைவாசலே திறந்து காஷ்மீரில் முழுமையான அமைதி திரும்புவதற்கு, அரசு மேலும் உறுதியுடன் செயல்பட வேண்டும்!