பு
திய பாடத்திட்டத்தின்படி வெளிவந்திருக்கும் தமிழ்ப் பாடநூல்களில் மரபிலக்கியங்களோடு நவீன இலக்கியங்களும் இடம்பெற்றிருப்பது முக்கியமான முன்னகர்வு. பாடத்திட்ட வரைவு குறித்த விவாதங்களில் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் பங்கெடுத்துக்கொண்டார்கள். வழக்கமாகக் கல்வித் துறை சார்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்றுவந்த பாடத்திட்ட விவாதங்களுக்கு இந்த முறை எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டதன் விளைவுகளையும் அவர்களின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையும் மொழிப்பாடங்களின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உணர முடிகிறது.
‘காஞ்சனை’ சிறுகதைத் தொகுப்புக்கான புதுமைப்பித்த னின் முன்னுரை, சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ குறும்புதினம், ப.ஜீவானந்தத்தைப் பற்றிய சுந்தர ராமசாமியின் கட்டுரை என்று நவீன தமிழிலக்கிய முன்னோடிகளின் எழுத்து கள் 11-ம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ளன. சமகால நவீன இலக்கியவாதிகளில் பிரபஞ்சனின் ‘பிம்பம்’ சிறுகதை, ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’ சிறுகதை, அ.முத்துலிங்கத்தின் ‘ஆறாம் திணை’ சிறுகதை, இந்திரனின் இலக்கியக் கட்டுரை, சுஜாதாவின் அறிவியல் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. பிரமிள், சு.வில்வரத்தினம், ஆத்மாநாம், இரா.மீனாட்சி, ஹெச்.சி.ரசூல், அழகிய பெரியவன் ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. பாப்லோ நெருடா கவிதையின் மொழிபெயர்ப்பும் மோனிடாகே, பாஷோ, இஸ்ஸா ஆகியோரின் ஹைக்கூ கவிதைகளின் மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளன.
9-ம் வகுப்பு பாடநூலில் கந்தர்வனின் சிறுகதையும் யூமா வாசுகியின் கவிதையும் இடம்பெற்றிருக்கின்றன. 6-ம் வகுப்பு பாடநூலில் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ நாவலின் கதைச் சுருக்கம் காமிக்ஸ் கதைவடிவில் இடம்பெற்றுள்ளது. இனி வெளிவரக்கூடிய பாடநூல்களில் தி.ஜ.ர, எஸ்.ராமகிருஷ்ணன், அப்துல் ரகுமான், மீரா, இன்குலாப், மாலதி மைத்ரி, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் இடம்பெற இருப்பதாகவும் தெரிகிறது. மரபுக் கவிதைகளிலும் கூட பெ.தூரன், தமிழ் ஒளி, ம.இலெ.தங்கப்பா போன்ற அவ்வளவாக பொதுக்கவனத்துக்கு வராத தமிழின் மிக முக்கியமான மரபுக் கவிஞர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்ப் பாடநூல்களுக்கான ஆலோசகர்கள், மேலாய் வாளர்கள், பாட வல்லுநர்கள் குழுக்களில் நவீன எழுத்தாளர்களும் நவீன இலக்கியத்தின்மீது அக்கறை கொண்ட கல்வி யாளர்களும் இடம்பெற்றிருப்பதன் காரணமாகவே இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதுமட்டுமின்றி, தமிழாசிரியர்களாகப் பணியாற்றும் நவீன இலக்கிய எழுத்தாளர்கள் பலரும் பாடநூல் உருவாக்கக் குழுவில் பங்கேற்றிருப்பது வரவேற்புக்குரியது. மொழியின் தொன்மைச் சிறப்போடு, அதன் நவீன பரிமாணங்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே முழுமையான மொழிப்பாடமாக இருக்க முடியும். அந்த வகையில், வெளிவந்திருக்கும் தமிழ்ப் பாடத்துக்கான புதிய பாடநூல்கள் பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்திருக்கிறது. இந்த முயற்சி அடுத்துவரும் பாடநூல் களிலும் தொடரட்டும்!