தலையங்கம்

வர்த்தகப் போருக்கு உலக நாடுகள் தீர்வு காண வேண்டும்!

செய்திப்பிரிவு

லகின் பெரிய நாடுகள் பரஸ்பரம் காப்பு வரிகளை உயர்த்தி விதிப்பதன் மூலம் வர்த்தகப் போரைத் தொடங்கியிருப்பது ஆபத்தான போக்காகும். உலக வர்த்தகம் சுருங்கி, அனைத்து நாடுகளிலும் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட இது வழிவகுக்கும். வேலையில்லாத் திண்டாட்டமும் பண்டங்களுக்குப் பற்றாக்குறையும் அதிகரிக்கும். பதிலுக்குப் பதில் காப்பு வரி என்று அமெரிக்கா மீதே அதைத் திருப்பினாலும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும்தான் பாதிப்பு ஏற்படும். விதிகளின்படியே வர்த்தகம் செய்யலாம் என்று ஜி-7 நாடுகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்ததை ஏற்க ட்ரம்ப் மறுத்துவிட்டார். இப்போதைக்கு சமரசத்துக்குத் தயார் இல்லை என்று உணர்த்தியிருக்கிறார்.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது 20,000 கோடி டாலர் புதிய வரி விதிக்குமாறு அரசு நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருப்பதாக சமீபத்தில் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா விதித்த 5,000 கோடி டாலர்கள் காப்பு வரிக்கு இது பதிலடியாகும். அதேசமயம், இந்தக் காப்பு வரிச் சண்டையில் முதல் நடவடிக்கையை எடுத்தது அமெரிக்காதான். பிற நாடுகளிலிருந்து உருக்கும் அலுமினியமும் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்கக் காப்பு வரி விதிக்கப்படும் என்று கடந்த மார்ச்சில் அது அறிவித்தது. அமெரிக்கா இப்போது புதிதாக அறிவித்துள்ள இறக்குமதி வரி, அளவில் பெரியது. 45,000 கோடி டாலர்கள் மதிப்புள்ள சீனப் பொருள்கள் இதுவரை வரிவிதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் இந்த காப்பு வரிப் போரில் இறங்கியிருக்கிறது.

இந்தியாவின் உருக்கு, அலுமினியம் மீது அமெரிக்கா விதித்துள்ள காப்பு வரியால் இந்தியாவுக்கு 24 கோடியே 10 லட்சம் டாலர்கள் மதிப்புக்கு இழப்பு என்பதை உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தப் பிரச்சினையை இப்படியே வரி–எதிர் வரி என்று போகாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கே விரும்புவதாகத் தெரிவித்திருந்தது.

இப்படி ஒரு வர்த்தகப் போர் வராது என்றே நினைத்து உலக நிதிச் சந்தை அலட்சியமாக இருந்தது. ஆனால், நிலைமை கைமீறிக்கொண்டிருக்கிறது. டௌ ஜோன்ஸ் தொழில் துறை சராசரி கடந்த செவ்வாய்க்கிழமை 1.6% சரிந்தது. ஷென்ஷன் ஒட்டுமொத்த குறியீட்டெண் 5.8% சரிந்தது. இந்த வர்த்தகப் போர் மோசமாகிவிடும் என்று நிதிச்சந்தை முதலீட்டாளர்கள் அஞ்சுவதையே இது காட்டுகிறது. அமெரிக்காவின் உருக்குத் தொழில் போன்ற சில பிரிவுகளுக்கு வேண்டுமானால் இந்தக் காப்பு வரி சாதகமாக இருக்கலாம். ஆனால், வர்த்தகப் போரில் இறங்கும் எல்லா நாடுகளுக்குமே வருவாய் இழப்புதான் ஏற்படும். நிலைமை மோசமடைவதற்கு முன்னால் உலகின் முன்னணி நாடுகள் இணைந்து சமரசத்தை ஏற்படுத்த வேண்டும்!

SCROLL FOR NEXT