தலையங்கம்

அயோத்திதாசர் விருது கட்டுரையாளர்களை சென்றடையட்டும்!

செய்திப்பிரிவு

செ

ன்னையில் 1845-ல் பிறந்தவரான அயோத்திதாசர், சமூக விடுதலைக்கான முன்னோடிகளில் ஒருவர் மட்டும் அல்ல; தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னோடிகளிலும் ஒருவர். எழுத்தை சமூக விடுதலைக்கும் சமத்துவத்துக்குமான கருவியாகக் கை கொண்டவர். தமிழ் தவிர சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை கொண்ட ஆளுமையான அயோத்திதாசர் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்னோடியாகவும் இருந்தவர். நவீன தமிழகத்தின் சாதி ஒழிப்புக்கான முன்னோடி குரல்களில் ஒன்று அவருடையது.

திராவிட மொழிக் குடும்பம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டவர்களிடையே மட்டும் புழங்கிவந்த ‘திராவிடம்’ என்ற சொல்லை ஒரு அரசியல் சொல்லாடலாக பயன்படுத்தியவர்களில் முன்னோடியும் அயோத்திதாசர். ரெவரெண்ட் ஜான் ரத்தினத்தோடு சேர்ந்து 1885-ல் ‘திராவிட பாண்டியன்’ வார இதழை அயோத்திதாசர் தொடங்கினார். 1891-ல் ‘திராவிட மகாஜன சபா’ அமைப்பை உருவாக்கினார். 1909-ல்

அயோத்திதாசர் மறைந்துவிடுகிறார். இதற்குப் பின்னரே நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிடக் கட்சிகள் என்று திராவிட இயக்க வரலாறு தொடங்குகிறது என்றாலும், அந்தச் சிந்தனை மரபில் முன்னோடியாகப் போற்றக்கூடியவரே அயோத்திதாசர். எனினும், அரசு சார்ந்த அவருக்கான அங்கீகாரம், அவர் நினைவைப் போற்றும் செயல்பாடுகள் என்பன இங்கு மிகக் குறைவு. இப்படிப்பட்ட சூழலில்தான் அயோத்திதாசர் பெயரில் ஒரு விருதை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

மிகுந்த வரவேற்புக்குரிய ஒன்று இது. அதேசமயம், இந்த விருது யாருக்கு வழங்கப்படப்போகிறது என்பதில் ஒரு தெளிவு இல்லை. “சமத்துவம், பொதுவுடமை, தமிழியல் ஆகியவற்றில் தனக்கென தனிமுத்திரை பதித்த அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் அவர்தம் லட்சிய நோக்குடன் செயலாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச் சான்றிதழும் வழங்கப்படும்” எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு எந்தத் துறையைச் சேர்ந்தவரும் இந்த விருதைப் பெறலாம் எனும் பொதுத்தன்மையைக் கொண்டிருக்கிறது. அப்படி அளிப்பது அந்த விருதுக்கு ஒரு தனித்த அடையாளத்தை வழங்காது. அரசு கொண்டிருக்கும் நல்ல நோக்கம் காலப்போக்கில் சிதைந்துவிடவே அது வழிவகுக்கும்.

எந்த எழுத்தை அயோத்திதாசர் தன்னுடைய பிரதான ஆயுதமாகக் கையாண்டாரோ அந்த எழுத்துத் துறையைச் சார்ந்தோருக்கே இந்த விருதை அளிப்பதே பொருத்தமானதாக இருக்கும். பத்திரிகையாளர்கள் / ஆராய்ச்சியாளர்கள் / கட்டுரையாளர்களுக்கான விருதாக இது அமைய வேண்டும். சமூகநீதி, சமத்துவத்துக்கான குரலாக எதிரொலிப்போரை இந்த விருது சென்றடைய வேண்டும்!

SCROLL FOR NEXT