ஜெ
ருசலேம் நகரில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்ட கடந்த மே 14-ல் நடந்தவை மரணங்கள் அல்ல, அப்பட்டமான படுகொலைகள். 2014-ல் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு நடந்துள்ள மிகப் பெரிய படுகொலைச் சம்பவம் இது. சர்வதேசச் சமூகம் இதில் மவுனம் சாதிக்கக் கூடாது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம், அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்ற உத்தரவிட்டார். அதன்படி தூதரகம் மாற்றப்பட்டது. அவர் வாக்குறுதி தந்தபோதே பலரும் இதன் பாதகங்கள் குறித்து கவலையடைந்து எச்சரித்தனர். ஆனால், டிரம்ப் பிடிவாதமாகச் செயல்பட்டிருக்கிறார். பாலஸ்தீனத்தில் சமரசம் ஏற்பட நானே ஒரு தீர்வைக் கொண்டுவருவேன் என்று கூறிய டிரம்ப், தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றியதன் மூலம் நெருக்கடியை மேலும் முற்றச்செய்துவிட்டார்.
1948-ல் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை அவர் களுடைய வீடுகளிலிருந்தும் வசிப்பிடங்களிலிருந்தும் வெளியேற்றிய ‘நக்பா’ நடவடிக்கையின் 70-வது ஆண்டு நினைவு நாளில், தூதரக இடமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதை எதிர்க்கும்வகையில், அப்பகுதிக்கு வாருங்கள் என்று பாலஸ் தீனர்கள் தரப்பு ஒலிபெருக்கிகள் அழைப்பு விடுத்தன. ஏராளமானோர் அந்த இடம் நோக்கி வரத் தொடங்கினர். இதற்கு எதிர்வினையாக, இஸ்ரேலிய ராணுவம் கூட்டத்தைப் பார்த்துச் சுட்டதில் குறைந்தது 60 பேர் இறந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர்.
தூதரகத் திறப்பில் கலந்துகொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராணுவம் சுட்டதில் பாலஸ்தீனர்கள் இறந்தது தொடர்பாக வருத்தப்பட்டு இரங்கல் எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக, ‘கொண்டாடுவதற்குரிய குறிப்பிடத்தக்க நாள்’ என்று பாராட்டினார். ஜெருசலேமை இஸ்ரேலுக்குரிய நகரமாக உலகின் பெரும்பாலான நாடுகள் ஏற்கவில்லை. இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய இறுதி சமரசத்தின் ஒரு பகுதியாகத்தான் ஜெருசலேம் இருக்க முடியும்.
ஜெருசலேம் முழுவதும் இப்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பாலஸ்தீனர்கள் கிழக்கு ஜெருசலேமுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்; அதில் ஜெருசலேமும் அடங்கும். அதுதான் தங்களுடைய தலைநகரம் என்கிறார்கள். இப்போது இந்தத் தொடர் வன்முறைச் சுழலில் சிக்கியிருக்கிறார்கள்.
வெளியுலகுக்கு வாக்குறுதிகளைத் தந்தாலும் இஸ்ரேல் மேற்குக் கரை ஆக்கிரமிப்பு, கிழக்கு ஜெருசலேம் நகர ஆக்கிரமிப்பு, காசா பகுதியை பாலஸ்தீனர்கள் நெருங்கிவிடாமல் தடுப்பது ஆகியவற்றைத் தொடர்கிறது. ஜெருசலேமை இஸ்ரே லின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரித்திருப்பதால், உண்மைகள் திரிக்கப்பட்டு தங்களுக்கு மேலும் பின்னடைவுகள் ஏற்படுத்தப்படும் என்று பாலஸ்தீனர்கள் அஞ்சுகின்றனர். சர்வதேசச் சமூகம் இனியும் மவுனம் சாதிக்கக் கூடாது.