தலையங்கம்

ரூபாயின் மதிப்பு குறைகிறது: எச்சரிக்கை அவசியம்!

செய்திப்பிரிவு

மீப நாட்களாக ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. கடந்த மே 15-ல் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகராக 68.07 ரூபாய் என்று மதிப்பு சரிந்தது. கடந்த 16 மாதங்களில் இந்த அளவுக்குச் சரிந்ததில்லை. 2018-ல் மட்டும் ரூபாயின் மதிப்பு 6.2% குறைந்திருக்கிறது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, ஏற்றுமதியாளர்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும். அவர்களுடைய ஏற்றுமதியும் வருவாயும் உயர வேண்டும். ஆனால் அது இப்போது நடக்கவில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதபடிக்கு இந்திய வர்த்தகத் துறை தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

பெட்ரோலியம் மற்றும் அது சார்ந்த பொருட்களின் இறக்குமதி மதிப்பு மட்டும் கடந்த ஆண்டு 41.5% அதிகரித்தது. கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை சர்வதேசச் சந்தையில் அதிகரித்துக்கொண்டே வருவதும், மேற்கு ஆசியப் பகுதியில் அதிகரித்துவரும் புவி-அரசியல் பதற்றமும், வெளிவர்த்தகப் பற்று வரவில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதகமும் ரூபாயின் மதிப்பைக் குறைத்து வருகின்றன.

அமெரிக்க அரசு தனது செலாவணியான டாலரின் சுழற்சியைக் கட்டுப்படுத்த எடுத்துள்ள முடிவும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் செலாவணி மதிப்பைக் குறைத்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி இதைவிடக் கடுமையான நிலையை எடுக்கக்கூடும் என்பதால், முதலீட்டாளர்கள் இந்திய பணச் சந்தையில் கடன் பத்திரங்களில் செய்த முதலீட்டை விலக்கிக்கொண்டுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.15,500 கோடி முதலீடு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 2016-க்குப் பிறகு விலக்கப்பட்ட முதலீட்டின் அதிகபட்ச அளவு இதுதான்.

இந்த விஷயத்தில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. வட்டி வீதத்தைச் சற்றே உயர்த்தினால் முதலீடுகளைத் திரும்பப் பெறும் போக்கைத் தடுக்கலாம். பணவீக்க விகிதம் அதிகரித்துவருவதால், வட்டி யைக் குறைப்பது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமே என்று அரசு கருதுகிறது. அதன் விளைவாக, ரிசர்வ் வங்கி யின் நிலைமைதான் திண்டாட்டத்துக்கு ஆளாகியிருக்கிறது. ரிசர்வ் வங்கிதான் விலைவாசியையும் கட்டுப்படுத்த வேண்டும், முதலீட்டையும் ஊக்குவிக்க வேண்டும்.

2013 முதல் சர்வதேசச் சந்தையில், கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை உயராமல் இருந்ததை இதுவரை அனுபவித்துத் திளைத்த ஆட்சியாளர்கள், ஏற்றுமதியை அதிகரிக்க இப்போது வழி கண்டாக வேண்டும். ஜிஎஸ்டி வரி செலுத்தும் ஏற்றுமதியாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் திருப்பித் தர வேண்டிய தொகையை உடனடியாகத் தர வேண்டும். காப்பு வரி அல்லது காப்பு வரியற்ற தடைகளை விலக்க வேண்டும். மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டிய தருணமிது.

SCROLL FOR NEXT