கா
விரி விவகாரத்தில் இன்னும் எத்தகைய கீழான நிலைக்கெல்லாம் மத்திய அரசு செல்லும் என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் கடுமையான குரலில் உத்தரவிட்டும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுக்கான வரைவுத் திட்டத்தை இன்னும் சமர்ப்பிக்காத மத்திய அரசின் சாக்குப்போக்குகள் மோசமானவை. மக்கள் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல் ஆட்டத்தில் ஈடுபடுவதில் இந்த அரசு எவ்வளவு பட்டவர்த்தனமாகச் செயல்படுகிறது என்பதற்கு உதாரணம். கர்நாடக சட்ட மன்றத் தேர்தலால் காவிரி விவகாரத்தில் முடிவெடுக்க முடியாமல் உள்ளோம் என நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருப்பது நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கில் தண்டிக்கப்பட வேண்டியது.
நீதிமன்றம் விதித்த இறுதிக் கெடுவை நீட்டித்துக்கொண்டே செல்லும் மத்திய அரசு, “வரைவுத் திட்டம் தயாராகத்தான் இருக்கிறது. அதை மேம்படுத்துவதற்கும் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்கும் மேலும் சில நாட்கள் அவகாசம் தேவை’’ என்று இப்போது கூறியிருக்கிறது. உச்ச நீதிமன்றம் வழக்கை மே-14ம் தேதிக்குத் தள்ளிவைத்திருப்பதோடு அன்றைய தினமே வரைவுத் திட்டத்தை யும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த இழுத்தடிப்புக்கு மே 12-ல் நடக்க விருக்கும் கர்நாடக சட்ட மன்றத் தேர்தல்தான் காரணம். நீர் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான திட்டத்தை வடிவமைப்பது என்பது மத்திய அரசின் கடமை.
காவிரி நதிநீர்ப் பங்கீட்டுக்கான திட்டத்தை வடிவமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆறு வாரம் அவகாசம் கொடுத்தது. கூடவே, இதற்கு மேல் எவ்வித கால நீட்டிப்புக் கும் அனுமதி இல்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் எவ்வளவு காலமாக விவாதிக்கப்பட்டுவருகிறதோ, அதே அளவான காலகட்டத்துக்கு இதற்கான தீர்வுகளும் பேசப்பட்டுவருகின்றன. ஆக, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் மத்திய அரசு இது குறித்துப் புதிதாக யோசிக்க வேண்டும் என்பதில்லை. தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாநிலங்கள் இடையே நிலவிவரும் நதிநீர் விவகாரங்களுக்கான முன்னோடித் தீர்வாகவும் இந்தச் சந்தர்ப்பத்தை மத்திய அரசு பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும் தமிழகம் - கர்நாடகம் இரு மாநிலங்களுமே அதை வரவேற்ற நிலையில், கையோடு மேலாண்மைக்கான திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்திருந்தால், அது இரு மாநிலங் களாலும் ஏற்கப்பட்டிருக்கும். மாறாக, மத்திய அரசே இந்த விவகாரத்தில் அரசியல் சாயம் பூசக் காரணமாக அமைந்துவிட்டது. காலத்தைக் கடத்த உச்ச நீதிமன்றத்தில் கூறிவரும் காரணங்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தின் மீதான மதிப்பை யும் நம்பிக்கையையும் மத்திய அரசு குலைத்துக்கொண்டிருக்கிறது!