ஸ்ரீ
நகரில் மே 7 அன்று நடந்த கல்வீச்சில், சென்னையிலிருந்து காஷ்மீருக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இளைஞர் திருமணி உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் தரும் சம்பவம். காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் வன்செயல்கள் அதிகரித்துவருகின்றன. ராணுவம், காவல் துறை மூலம் எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டும் அமைதி திரும்பிவிடாது. அரசியல்ரீதியிலான தீர்வு காண தொடர்புள்ள அனைத்துத் தரப்புடனும் மத்திய அரசு பேச வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் மத்திய அரசுக்கு உள்ள அக்கறையை அரசியல் நடவடிக்கைகள் மூலம்தான் நிரூபிக்க முடியும். தாங்களாகவோ, மற்றவர்களால் தூண்டப்பட்டோ அமைதியைச் சீர்குலைக்கத் துணைபோகும் காஷ்மீர் இளைஞர்களை சாந்தப்படுத்த சமரச நடவடிக்கைகள் அவசியம்.
ஷோபியான் மாவட்டம் மீண்டும் பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. கடந்த மே-6 அன்று பாதுகாப்புப் படையுடன் நடந்த மோதலில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் சுட்டுக்கொல்லப்பட்ட தளபதி புர்ஹான் வானியின் உதவியாளரும், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருந்து தீவிரவாதிகளுடன் சேர்ந்துகொண்டவரும் துப்பாக்கிச் சண்டையில் இறந்துள்ளனர். ஷோபியான் மாவட்டத்தின் படிகாம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் இறங்கியபோது, அவர்களை நோக்கி தீவிரவாதிகள் சுட ஆரம்பித்தனர். இதையடுத்து மேலும் சில படைப்பிரிவுகள் அந்த இடத்துக்குச் சென்றன. துப்பாக்கிச் சண்டை ஓசை கேட்டதும் பொதுமக்கள் அங்கு குவிந்ததோடு பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சிலும் ஈடுபட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கின் வேறு இரு இடங்களிலும் பொதுமக்கள் வீதிக்கு வந்து வன்செயல்களில் ஈடுபட்டனர். மே-6 அன்று மட்டும் வன்செயல்கள், துப்பாக்கிச் சண்டைகளில் 24 பேர் இறந்துள்ளனர்.
காஷ்மீரில் 1990 முதல் ஆண்டுதோறும் வன்செயல்களால் சில ஆயிரம் பேர் பலியாவது தொடர்கிறது. 2007-க்குப் பிறகு வன்செயல்கள் குறைந்திருந்தன. 2013 முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. 2016 ஜூலையில் புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு ஏராளமான இளைஞர்கள் ஆயுதம் ஏந்தத் தொடங்கிவிட்டனர். 2017-ல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 358 பேர் பலியாகியுள்ளனர்.
அமைதியைக் காட்டிலும் மேலானது ஏதுமில்லை. அரசுதான் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசு அனைத்துக் கட்சிக் குழுவை உடனடியாக காஷ்மீருக்கு அனுப்பிவைத்து பேச்சுகளைத் தொடங்க வேண்டும்.