தலையங்கம்

காஷ்மீரின் நிரந்தர அமைதிக்கு போர் நிறுத்தம் முதல் படியாக இருக்கட்டும்!

செய்திப்பிரிவு

நோ

ன்புப் பெருநாளையொட்டி ரம்ஜான் மாதம் முழுவதும் இந்திய பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை. என்றாலும் தீவிரவாதத்துக்கு ஆதரவு குறையவும், மத்திய அரசின் மீது காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கையும் நல்லெண்ணமும் வளரவும் பாதுகாப்புப் படை யினரின் தாக்குதல்களை நிறுத்திவைப்பது மட்டும் போதாது; மக்களுடைய பொருளாதாரம் மேம்படும் செயல்களுக்கும் அரசு முக்கியத்துவம் தர வேண்டும்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் ‘தளபதி’ என்று அழைக்கப்படும் புர்ஹான் வானி 2016 ஜூலையில் நடந்த மோதலில் இறந்தார். அதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவிவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று மாநிலத்தின் அனைத்துக் கட்சிகள் மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது என்று மெஹ்பூபா முஃப்தி மத்திய அரசுக்குத் தெரிவித்த பிறகு, மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. மற்றவர்களால் தாக்கப்பட்டாலோ, அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ மட்டும் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசு தெளிவாக உத்தரவிட்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்தச் செயல், காஷ்மீர் முதலமைச்சர் அரசியல்ரீதியாகத் தன்னை வலுப்படுத்திக்கொள்ளவும், அமைதிக் காலத்தில் நிர்வாகரீதியான சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும். பள்ளத்தாக்கில் சமீப காலமாக நடந்துவரும் மோதல்களில் ஈடுபடுவோர் வெளியிலிருந்து ஊடுருவுவோர் அல்ல, இங்கிருந்தே தெரிவுசெய்யப்பட்டு பயிற்சி பெறுவோர் என்பது தெரியவந்திருக்கிறது. இப்படித் தீவிரவாதிகளாக மாறுவோர் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதல்களில் கொல்லப்பட்ட பிறகு, இறுதிச் சடங்குக்கு வருவோரில் சிலர் புதிதாக தீவிரவாதிகளாக மாறுவதும் தொடர்ந்துகொண்டே வருகிறது. இனி இதற்கு வாய்ப்பு கள் குறையக் கூடும். உள்ளூர் குழுக்கள் அரசின் நடவடிக்கையால் நம்பிக்கையடைந்து தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசுடன் ஒத்துழைக்கும் வாய்ப்பையும் இது ஏற்படுத்தித் தந்துள்ளது. மத்திய அரசின் இப்போதைய அறிவிப்பு 2000-ல் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் ரம்ஜான் மாதத்தில் இதே போல எடுக்கப்பட்ட சமரச முயற்சிகளை நினைவுபடுத்துகிறது. 1999-ல் கார்கிலில் பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் ஊடுருவி தாக்குதலைத் தொடுத்திருந்த நிலையிலும் சமரச முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது. நிபந்தனை ஏதுமற்ற, அரசியல்ரீதியிலான பெரும் நடவடிக்கைதான் நல்ல பலனை அளிக்கும். இதில் வாஜ்பாயின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடியும் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் போர் நிறுத்தம் வலுவில்லாத ஒற்றை முயற்சியாகிவிடும்.

SCROLL FOR NEXT