கே
ரளத்தில் 13 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு, இந்திய சுகாதாரத் துறைக்கு உருவாகியிருக்கும் புதிய சவால். இந்நோய்க்கான சிகிச்சைக்கு மருந்து இல்லை என்பதும், மனிதர்களிடையே இந்த வைரஸ் வெகு எளிதாகவும் வேகமாகவும் பரவக்கூடியது என்பதும் மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. உடனடியாக முன்னுரிமை தந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டிய 10 நோய்களில் இந்த ‘நிபா’ காய்ச்சலையும் சேர்த்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
1998-ல் மலேசியாவின் ‘சுங்கை நிபா’ என்ற இடத்தில்தான் இந்த வைரஸ் காய்ச்சல் முதலில் ஏற்பட்டது. எனவே, இந்த நோயை ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் என்றே அழைக்கின்றனர். பிறகு 2007-ல் மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் இந்நோய் தலைகாட்டியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர் அங்கு கிடைத்த பனங்கள்ளைக் குடித்ததால் காய்ச்சலுக்கு ஆளானார். அந்தக் கள்ளில் வெளவால்களின் எச்சங்கள் இருந்தன. பிறகு, அந்த நபரின் உறவினர்களும் அவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் உள்ளிட்ட மருத்துவத் துறையினரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 74.5% உயிரிழப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பதிலிருந்தே இது எவ்வளவு பெரிய ஆபத்தான காய்ச்சல் என்பதை உணர முடிகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானால், கடுமையான காய்ச்சல் வரும். மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி, மயக்கம் ஆகியவை ஏற்படும். இது நீடித்தால் 10 நாட்களுக்குப் பிறகு மூளைக் காய்ச்சலாக மாறி விடும். பழந்தின்னி வெளவால்களால் இந்த வைரஸ் தெற்காசிய நாடுகளில் பரவிவருகிறது.
கேரளம் மருத்துவ சுகாதாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் மாநிலம் என்பதால், இந்த வைரஸ் காய்ச்சல் பரவிய ஓரிரு நாட் களுக்குள்ளேயே அது அடையாளம் காணப்பட்டு, மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பரவியது. தமிழகத்திலும் சுகாதாரத் துறை எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இது வராமல் தடுத்துக்கொள்வதே உயிரைக் காக்கும் வழியாகும்.
இந்நோய் வராமலிருக்க மக்களும், சுகாதாரத் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம், பறவைகள், பிராணிகள் கடித்த பழங்களை உண்ணக் கூடாது. காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று அனைத்துப் பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். இந்நோய் தொடர்பான தவறான கண்ணோட்டத்தால், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள் உள்ளிட்டோரைத் தனிமைப்படுத்தும் போக்கும் அதிகரித்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தான விஷயம். நிபா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தவறான புரிதல்களைக் களையும் வகையிலான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் அரசு முன்னெடுக்க வேண்டும்!