கி
ராமப்புறங்களிலிருந்து பிழைப்புக்காக நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கும் போக்கு உலகமெங்கும் அதிகரித்துவரும் சூழலில், 2028-ம் ஆண்டுவாக்கில், டோக்கியோவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக டெல்லி இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது, ஐநா பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் அறிக்கை. 2050-ம் ஆண்டுவாக்கில் உலக அளவில் நகரங்களில் மக்கள்தொகை எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பது தொடர்பாக ஐநா வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையின்படி, தற்போது 34% ஆக இருக்கும் இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 2028 வாக்கில் 52.8% ஆக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில், நகர்ப்புற மக்கள்தொகை வளர்ச்சியில் இந்தியா, சீனா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பங்கு 35% ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளரும் நாடுகள், குறிப்பாக இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் முக்கியமான சவாலை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. நகரமயமக்கல் என்பது சிக்கல்கள் நிறைந்த விஷயமாக மாறியிருக்கிறது. கிராமப்புறங்களில் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான உறுதியான கொள்கைகள் அரசுகளிடம் உண்டு. அதேசமயம், கிராமப்புறங்களில் போதுமான சேவைகளை வழங்கும் வகையிலும், நகர்ப்புறங்களில் உற்பத்தியும் திறனும் அதிகரிப்பதில் மாற்றம் இல்லாத நிலையை உறுதிசெய்யும் வகையிலும் கொள்கைகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் உருவாக்க வேண்டும்.
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினர்தான் நகரங்களில் வசிக்கிறார்கள் என்றாலும், நகரங்களில் ஒழுங்கற்றத்தன்மை கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்திருப்பது முக்கியமான பிரச்சினை. நகரங்களில் வீடுகள் பற்றாக்குறை காரணமாகக் குடிசைப் பகுதிகள் அதிகரித்திருக்கின்றன. கட்டிட விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாததால், பெருநகரங்களில் இடநெருக்கடி அதிகரித்திருக்கிறது. 2.5 மைக்ரோமீட்டர் அளவு கொண்ட மாசுகள் கலந்ததால் காற்று மோசமாக மாசடைந்திருக்கும் 20 நகரங்கள் அடங்கிய உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தச் சூழலில், நகர அரசுகள் சுயமாக இயங்கவில்லை என்றால் நகர்மயமாக்கலின் பாதிப்புகள் கடுமையாக இருக்கும்.
2022-க்குள் அனைவருக்கும் வீடு எனும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பது பாராட்டுக்குரியது. எனினும், இவ்விஷயத்தில் மாநில அரசுகள் உத்வேகமாகச் செயல்படவில்லை என்றாலோ, புதிய சிந்தனை கொண்ட, செலவு குறைந்த திட்டங்கள் இல்லை என்றாலோ அந்த இலக்கை அடைவது சாத்தியமில்லை. எனவே, மாநிலங்களுக்கு உரிய உத்வேகமும் நிதியும் அளிக்கப்பட வேண்டும். வாடகை வீடுகளை அதிகரிப்பதற்கு இந்தத் திட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். பசுமை நிறைந்த இடங்கள், திறந்தவெளிகள், ஈரநிலங்கள் போன்றவை நகரங்களை சுத்தமானவையாகவும், அழகுணர்ச்சி கொண்டவையாகவும் இருப்பதை உறுதிசெய்ய முடியும்!