தி
ரிபுராவில் ஆட்சியைப் பிடித்த பிறகு, மாநில வளர்ச்சிக்கு பாஜக அரசு ஏதேனும் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதையே கடமையாகச் செய்துவருகிறார் புதிய முதல்வர் விப்லவ் குமார் தேவ். இது அம்மாநில மக்களிடம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
“பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இணையதளத் தொடர்பும் செயற்கைக்கோள்களின் பயன்பாடும் இருந்திருக்கிறது”, “சிவந்த நிறமுள்ளவர்கள்தான் அழகிகள், மாநிறமெல்லாம் அழகாக இருக்க முடியாது”, “சிவில் நிர்வாகத்துக்கு ஏற்றவர்கள் சிவில் இன்ஜினீயர்கள்தான், மெக்கானிக்கல் இன்ஜினீயர்கள் ஏற்றவர்கள் அல்ல” என்று அடுத்தடுத்து அபத்தக் கருத்துகளை வெளியிட்டுவருகிறார். “பாஜக வென்றால் எல்லோருக்கும் வேலை நிச்சயம்” என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, இளைஞர்கள் பீடா கடைகளைத் திறந்தும் மாடு வாங்கி பால் கறந்து விற்றும் வேலைவாய்ப்பும் வருமானமும் பெறலாம் என்று பொறுப்பில்லாமல் பேசுகிறார்.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 87%. 1,000 ஆடவர்களுக்கு 960 மகளிர் என்று பாலின விகிதத்திலும் முன்னிலை வகிக்கிறது. சிசுக்கள், சிறு குழந்தைகள் இறப்பு விகிதமும் வெகுவாகக் குறைக்கப்பட்டு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இதெல்லாம், முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரின் சாதனைகள். நபர்வாரி வருவாய் மட்டும்தான் தேசிய சராசரியைவிடக் குறைவாக இருக்கிறது. சாலை, மின்சாரம், தகவல்தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்ட அடித்தளக் கட்டமைப்பு வசதிகள்தான் போதிய அளவில் இல்லை. வேலை கிடைக்காத இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகம். திரிபுராவின் புதிய முதல்வர் கவனிக்க வேண்டியது இவற்றைத்தான். பொருளாதார வளர்ச்சியில் மட்டும் பின்தங்கிய நிலையில் இருந்ததால் அந்த வளர்ச்சி பாஜக மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் அக்கட்சி தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.
பொது வாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் பொறுப்புடனும் நடக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். பொழுது போகாமல் திண்ணையில் உட்கார்ந்து வெட்டி அரட்டையில் பேசுவதைப் போல சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களுக்கு முன்னாலும் பேசினால் அது சில மணி நேரங்களுக்கெல்லாம் லட்சக்கணக்கானோரைச் சென்றடைகிறது என்பதை அனைவரும் கவனத்தில் வைக்க வேண்டும். வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம் என்று பாஜகவினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தும் பலர் தங்களுடைய வாயைக் கட்டத் தயாராக இல்லை என்பதையே விப்லவ் குமார் போன்றோர் உணர்த்துகின்றனர். எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்துவிட்டு காத்திருக்கும் இளைஞர்களின் கோபத்துக்கும் அதிருப்திக்கும் ஆளாக வேண்டாம்.