தலையங்கம்

பருவமழையைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வோம்!

செய்திப்பிரிவு

ந்த ஆண்டுக்கான பருவமழை பொய்க்காது என்று நம்பிக்கையளித்திருக்கிறது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினருக்கும் ஆறுதல் தருகிறது இந்த அறிவிப்பு. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான கோடைக்காலத்தில், கடந்த 50 ஆண்டுகால சராசரி மழை அளவான 89 சென்டி மீட்டரில் 97% மழையை எதிர்பார்க்கலாம் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது. வேளாண் துறையில் நிதிச் சிக்கல்கள் இருக்கும் இந்தச் சூழலிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்ததைப் போல் பயிர் விளைச்சல்கள் அதிகம் இருக்கும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை முறை மூலம் அதிக வருவாய் கிடைக்க மத்திய அரசு ஆதரவளித்துவருகிறது. கூடுதல் ஊக்கத்தொகைகள் உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன. இவை அரிசி, கோதுமை ஆகிய பயிர்களின் விளைச்சலுக்கு உதவியிருக்கின்றன. எனினும், இந்தப் பயிர்கள் பெருமளவில் நிலத்தடி நீரைச் சார்ந்தவை என்பதால் இந்த நடவடிக்கைகள் மட்டும் போதுமானவை அல்ல.

இந்த ஆண்டும் நல்ல விளைச்சல் எதிர்பார்க்கப்படும் நிலையில், போதுமான வருவாய்க்கு வழிவகைசெய்யப்பட வேண்டும். ஊடுபயிர்களைப் பயிரிட விவசாயிகளுக்கு ஆக்கபூர்வ ஆலோசனைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும், வேளாண் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவை விடக் கூடுதலாக 50% அளவுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை அளிப்பதாக அளித்திருக்கும் உறுதிமொழியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

மழைநீரைச் சேகரிப்பது என்பது அவசியமான விஷயம். செயற்கையான முறைகளைப் பயன்படுத்தி நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதற்காக மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் அறிவியல்பூர்வமாக அமைய வேண்டும். இவ்விஷயத்தில் மாநிலங்களுக்குத் தேவையான கட்டமைப்புகள் செய்து தரப்பட வேண்டும்.

அரிசி, கோதுமை பயிரிடும் விவசாயிகள், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் அதற்கான வசதிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும். அரிசி, கோதுமை விளைச்சலுக்கு சீன விவசாயிகளைவிட இந்திய விவசாயிகள் அதிக அளவில் தண்ணீரைப் பயன்படுத்துவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

1950-லிருந்து பருவமழையில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருப்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2002-லிருந்து அன்றாட சராசரி மழைப்பொழிவு அதிகரித்துவருகிறது. பருவமழையால் நல்ல மழைப்பொழிவு ஏற்படுவது என்பது நல்ல வேளாண் விளைச்சலையும் அதன் மூலம் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தையும் உறுதிசெய்யும். இந்நிலையில், மக்களின் பங்கேற்புடன், நிலத்திலும் நிலத்தடியிலும் மழைநீரைச் சேகரிக்கும் வகையில் பருவமழையைச் சரியான முறையில் பயன்படுத்துவது மத்திய அரசின் கடமை!

SCROLL FOR NEXT