கா
விரி நதிநீர்ப் பகிர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை நிறைவேற்றுவதைத் தள்ளிப்போட்டதற்கான பெரிய விலையை பாஜக அரசு தமிழகத்தில் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. சென்னை வந்த பிரதமருக்கு எதிரான போராட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் பரவலான ஆதரவும், சமூக வலைதளங்களில் ‘திரும்பிச் செல்லுங்கள் மோடி’ ஹேஷ்டேக் (#gobackmodi) சர்வதேச அளவில் நேற்றைய தினம் ட்ரெண்டிங் ஆக இருந்ததும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான தமிழகத்தின் உணர்வைப் பிரதிபலித்திருப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. காவிரி தொடர்பாக ஒரு வார்த்தைகூட பிரதமர் பேசாமல் திரும்பிச் சென்றிருப்பது பெருத்த ஏமாற்றமாகவே இருக்கிறது.
கால் நூற்றாண்டு இழுபறிக்குப் பின் அளிக்கப்பட்ட தீர்ப்பு இது. இடைப்பட்ட காலத்திலேயே நிறைய இழந்துவிட்டார்கள் தமிழக விவசாயிகள். இறுதித் தீர்ப்பு ஏற்கெனவே கிடைத்துவந்த தண்ணீரிலும் கொஞ்சம் குறைத்தது. அதையும்கூட உறுதிப்படுத்த மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு காலம் கடத்தும் நிலையில்தான் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. மே 12 அன்று கர்நாடகத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மோடி அரசு ஏன் இழுத்தடிக்கிறது என்பது யாருக்கும் புரியாத ரகசியம் ஒன்றும் இல்லை. தேசியக் கட்சி என்ற அளவிலும் சரி; இந்நாட்டை ஆளும் கட்சி என்கிற நிலையிலும் சரி; பாஜக ஒருபோதும் செய்திருக்கக் கூடாத காரியம் இது. தமிழகத்தில் அடுத்தடுத்து போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிய நிலையிலேனும் அக்கட்சி சுதாரித்திருக்க வேண்டும்; ஆனால், டெல்லியிலிருந்து இது சம்பந்தமாகப் பேசுபவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குரலில் பேசிவருகிறார்கள். பிரதமரோ தொடர்ந்து அமைதி காக்கிறார். உள்ளூர் பாஜகவினரோ போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகவே பேசிவருகிறார்கள்.
போராட்டங்களை முன்னெடுப்பவை எதிர்க்கட்சிகளாக இருக்கலாம்; போராட்டங்கள் தமிழகத்தின் நலன் கருதி நடக்கின்றன, தமிழக மக்களின் உணர்வை அவை பிரதிபலிக்கின்றன. ஆள்பவர்கள் இதை உணர வேண்டும். மக்கள் குரலுக்கு காது கொடுக்காத ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த கதைகள் வரலாறு நெடுகிலும் கிடைக்கின்றன. அந்த வரலாற்றில்தான் தன் பெயரும் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறாரா மோடி?