தலையங்கம்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: மறுபரிசீலனை அவசியம்

செய்திப்பிரிவு

ன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பல மாநிலங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை தரும் நிகழ்வு. இந்தத் தீர்ப்புக்கு எதிர்வினை வலுவாக வரும் என்று எதிர்பார்க்காத மத்திய அரசும் மாநில அரசுகளும், தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு நடத்திய போராட்டங்களைச் சமாளிக்க முடியாமல் திணறின. தனது அணுகுமுறை காரணமாகத்தான் உச்ச நீதிமன்றம் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியது என்ற எண்ணம் நீங்க வேண்டும் என்பதற்காக, தீர்ப்பை மறுபரிசீலனை கோரும் மனுவைத் தாக்கல்செய்திருக்கிறது மத்திய அரசு.

இந்தத் தீர்ப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் உச்ச நீதிமன்றம் உணர்த்திய மறைமுகத் தகவல்தான் அவர்களை இந்த அளவுக்குக் கொதிப்படைய வைத்திருக்கிறது. சாதியின் பெயரால் இழிவைச் சந்திக்கும் மக்களுடைய இன்னலைப் புரிந்தும் புரியாததைப்போல, அவர்களால் புகாருக்கு உள்ளாகிறவர்கள்தான் அப்பாவிகள் என்பதைப் போல தீர்ப்பு இருப்பதாகவே பலரும் முடிவுக்குவந்திருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய கோபத்துக்கும் எதிர்வினைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்வதற்கு முன்னால் அரசு ஊழியராக இருந்தால் - அத்துறைத் தலைவரின் ஒப்புதலையும், சாதாரண மக்களாக இருந்தால் - மாவட்ட காவல் துறை மூத்த கண்காணிப்பாளரின் ஒப்புதலையும் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த உத்தரவானது நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்துக்கும் மேலாக, 'நீதித் துறை இயற்றும் சட்டமா?' என்ற ஐயம் எழுந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமீபத்திய கோபம் முழுவதும் இந்தத் தீர்ப்பினால் மட்டும் உருவானதா என்பதும் ஆராயப்பட வேண்டும். சமீப காலமாகவே சமூகச் சூழல் அவர்களுக்கு எதிராக மாறிவருகிறது. சகிப்புத்தன்மையற்றவர்கள் பல்வேறு விதங்களிலும் அவர்களுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடுக்கின்றனர். அரசின் நிர்வாகத் துறையும் நீதித் துறையும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பரிவோடு செயல்படுவதில்லை. இந்நேரத்தில் இப்படிப்பட்ட தீர்ப்பு அவர்களுடைய அச்சத்தையும் ஆற்றாமையையும் அதிகப்படுத்தியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு தொடர்பான மறுவிசாரணையை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு. இப்போது தேவைப்படுவதெல்லாம் அமைதியும் சமரசமும்தான். தங்களுடைய தீர்ப்பு அப்பாவிகளுக்குச் சாதகமானதுதானே தவிர, சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் செயலையோ, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மறுக்கும் செயலையோ மேற்கொள்ளவில்லை என்று அமர்வு கூறியிருக்கிறது. சட்டத்தின் பெயரால் அப்பாவிகள் அலைக்கழிக்கப்படாமல் காப்பாற்றப்படுவதும், காலம்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் காப்பாற்றுவதும் ஒரே சமயத்தில் நடைபெற வேண்டும்.

ஒன்றுக்காக இன்னொன்றை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தொடர்ந்தும் அதிகம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் என்று தெரியும். ஒடுக்கப்பட்டவர்களின் கோபத்தையும் அதிருப்தியையும் கணக்கில் கொண்டு, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் தீர விசாரித்து மறுபரிசீலனைசெய்ய வேண்டும். அதற்கேற்ற அமைதியான, பதற்றமற்ற சூழலை அனைவரும் உருவாக்க வேண்டும்!

SCROLL FOR NEXT