செ
ன்னையில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற காரணத்துக்காக இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவல் அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி தருகிறது. திருச்சியில், தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது போக்குவரத்துக் காவலர் உதைத்ததால் பெண் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னர் நடந்திருக்கும் கொடூரமான சம்பவம் இது. விபத்துகளைத் தவிர்க்கும் வகையிலும், சாலை விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதிலும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய காவலர்களில் சிலர், இப்படி அத்துமீறுவது ஒட்டுமொத்தக் காவல் துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் செயல்.
சென்னை தியாகராய நகரில் பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பிச் சென்ற பிரகாஷ், அவரது தாய், சகோதரி மூவரும் இத்தகைய அதிர்ச்சிகரமான நிகழ்வை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பிரகாஷ் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டியதும், ஒரே வாகனத்தில் மூன்று பேர் பயணித்ததும் சாலை விதிமீறல்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அதற்காக, குடும்பத்தினர் கண் முன்னேயே அவரைக் கம்பத்தில் கட்டிவைத்து அடிப்பது என்பது காவல் துறையின் அதிகார வரம்பு மீறல் என்று சுருக்ககிவிட முடியாது. அராஜகம். இத்தனைக்குப் பிறகும், போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து, தகராறு செய்ததாக பிரகாஷ் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீஸார், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். நிபந்தனை ஜாமீனில் தற்போது அவர் விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் விளக்கம் வேறு அளித்திருக்கிறார்கள். கண்காணிப்பு கேமரா, செல்போன் கேமரா, சமூக வலைதளங்கள் என்று பல்வேறு சாதனங்கள் புழங்கும் இன்றைய காலகட்டத்திலும் பகிரங்கமாகவே இப்படியான தாக்குதல்களைக் காவலர்கள் நடத்துகிறார்கள் என்றால், தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனும் நம்பிக்கைதான் முக்கியக் காரணம். வாகன ஓட்டிகளிடம் காவலர்கள் லஞ்சம் வாங்கும் காணொலிக் காட்சிகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமூக வலைதளங்களில் வெளியான பின்னர்தான் இடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தியாகராய நகர் சம்பவத்தைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது ஏமாற்றம் தரும் விஷயம். மாநில அரசு என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து சம்மன் அனுப்பியிருப்பதுதான் ஒரே ஆறுதல்.
திருச்சி சம்பவம் நடந்தபோதே, காவலர்கள் அத்துமீறி நடந்துகொள்து தொடர்பான கண்டனங்கள் எழுந்தன. ஆனால், இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, எச்சரித்து அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளை காவலர்கள் மேற்கொள்ளலாம். வாக்குவாதம், கடுஞ்சொற்களுக்கு அங்கே இடமில்லை. அப்படித்தான் சட்டம் சொல்கிறது. காவல் துறையினருக்கு வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. இவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டியது காவலர்களின் கடமை. அதேபோல், சாலைவிதிகளை முறையாகப் பின்பற்றுவது உயிரிழப்புகளையும் அபராதத்தையும் வீண் அலைச்சலையும் தவிர்க்கும் என்பதைப் பொதுமக்களும் உணர வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புடன் நடந்துகொண்டால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும்!