தலையங்கம்

மக்கள் உணர்வுக்கு நாடாளுமன்றத்தில் மதிப்பிருக்கிறதா?

செய்திப்பிரிவு

ளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் பிடிவாத மோதல்களால் தினந்தோறும் அமளி, ஒத்திவைப்பு நடவடிக்கைகள் என பெரும்பாலான நாள்கள் வீணடிக்கப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தின் இன்னொரு கூட்டத் தொடரும் முடிவுக்கு வந்துவிட்டது வேதனை தருகிறது.

வெவ்வேறு நாட்களில் அவைத் தலைவர்களின் இருக்கைக்கு அருகே சென்று முழக்கமிடுவது, பதாகைகளுடன் காட்சி தருவது என்று செயல்பட்டன வெவ்வேறு அரசியல் கட்சிகள். இரு அவைகளுமே திட்டமிட்ட நடவடிக்கைகளை நடத்த முடியாமல் 10% அளவுக்கே செயல்பட்டன. ஏராளமான மசோதாக்கள் விவாதத்துக்குக் காத்திருந்தும் ‘பணிக்கொடை வழங்கல் (திருத்த)மசோதா-2017’ மட்டுமே மாநிலங்களவையில் நிறைவேறியது. மக்களவை நிதி தொடர்பாக ‘நிதி மசோதா-2018’-ம் வேறு இரு செலவு அனுமதி கோரிக்கை மசோதாக்களும் மட்டுமே மக்களவையில் நிறைவேறின. இரு அவைகளும் 120 மணி நேரத்துக்கும் மேல் அமளி, இடையூறுகளால் செயல்படவில்லை. மாநிலங்களவையில், நட்சத்திரக் குறியிட்ட 419 கேள்விகளில் 5 மட்டுமே விடைகளைப் பெற்றன. இத்தனை மணி நேரம் வீணானது, இத்தனை மசோதாக்கள் விவாதிக்கப்படவில்லை, இவ்வளவு கேள்விகளுக்கு விடையில்லை என்ற எண்ணிக்கை சார்ந்த தரவுகளைவிட முக்கியமானது ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் மனம்விட்டுப் பேசி சமரசமாகப் போவதற்கு மனமில்லாமல் போனதுதான். எப்படியும் பிரதான பொறுப்பாளி ஆளுங்கட்சி. அவர்கள்தான் பெரும்பான்மை. எதிர்க்கட்சிகளை அழைத்துப் பேசி சமாதானத்துக்கு இழுத்திருக்க வேண்டும்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது எல்லா விவரங்களையும் எதிர்க்கட்சிகள் வெளியிடும். அது மக்களுக்குத் தெரிந்துவிடும் என்று அஞ்சி ஆளும் கட்சியே இடையூறுகளைத் தூண்டிவிட்டதாக எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. விவாதிக்கவோ, விளக்கம் கேட்கவோ விரும்பாமல் அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்து தடுத்தது எதிர்க் கட்சிகள்தான் என்று ஆளும் கூட்டணி குறிப்பாக, ஆளும் கட்சி எதிர்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சந்திக்கும் துணிவும் கண்ணியமும் இல்லாமல் ஆளும் கட்சியும் மோதல்களைத் தடுக்காமல் உள்ளூர ரசித்தது. மக்களவைத் தலைவர் தனது கடமையைச் சரிவர ஆற்றாமல், அவை நடவடிக்கை முடங்க முக்கியக் காரணமாகிவிட்டார். நாடாளுமன்றத்தின் மீதான மக்களுடைய நம்பிக்கை குலையுவும் அதிருப்தி அதிகரிக்கவுமே எல்லோரும் வேலைபார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT