தலையங்கம்

சரக்கு மின்வழி ரசீது நடைமுறை சீராக இருக்கட்டும்!

செய்திப்பிரிவு

ரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குக் கொண்டுசெல்லப்படும் சரக்குகளுக்கு மின்வழி ரசீது (ஈ-வே பில்) தயாரிக்கும் நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துவிட்டது. கடந்த பிப்ரவரி மாதமே கொண்டுவருவதாக இருந்து, கணினி மென்பொருள் காரணமாக எழுந்த சிக்கல்களால் இது தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, முதல் மூன்று நாட்களிலேயே 17 லட்சம் ரசீதுகள் தயாராகியிருக்கின்றன. இந்தப் பரிவர்த்தனை மேலும் அதிகமானாலும் தாங்கும் வகையில் கணினித் தொழில்நுட்பம் தயார் நிலையில் இருக்கிறது என்று அரசு தெரிவித்திருக்கிறது. ஜிஎஸ்டி மூலமான வரி வருவாய் அதிகரித்திருக்கிறது என்ற செய்தியும் அரசுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களில் ரூ.90,000 கோடியைத் தாண்டிய வரி வருவாய், பிறகு குறையத் தொடங்கியது. 2017 நவம்பரில் ரூ.83,716 கோடியானது. இதையடுத்து அரசு கவலையடைந்து வரி ஏய்ப்பு நடக்கிறதா என்று ஆராய்ந்தது. இப்போது வெளி மாநிலங்களுக்குக் கொண்டுசெல்லப்படும் சரக்குகளுக்கு மின்வழி ரசீது முறையும் அமலாகத் தொடங்கிவிட்டதால் வரி ஏய்ப்பு முயற்சிகளும் குறையும் என்று நம்பலாம். அதுமட்டுமல்லாமல் பதிவுசெய்துள்ள வியாபாரிகள் யார், எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்ற தகவல்கள் அரசுக்குக் கிடைத்துவருகின்றன. வரி செலுத்தாதவர்கள் மீதான கவனிப்பும் அதிகமாகிவருகிறது.

வரிக் கணக்கு தாக்கல் முறையை மேலும் எளிதாக்குவதற்குத் தொடர் நடவடிக்கைகள் எடுப்பதால் வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கையும் வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகும். சரக்கு மின்வழி ரசீதும் நடைமுறைக்கு வந்துவிட்டதால் இனி வரி ஏய்ப்பு செய்வது எளிதாக இருக்காது என்று நம்பலாம். இப்போது நாடு முழுக்க 11 லட்சம் பேர் பொது சரக்கு, சேவை வரி செலுத்துகின்றனர். 20,000-க்கும் மேற்பட்ட சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் அரசிடம் பதிவுசெய்துள்ளன. சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட துறையின்கீழ் வருபவையல்ல. லாரி ஓட்டுநர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தறிவு குறைவானவர்கள். எனவே வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க திடீர் சோதனை நடத்தும் அதிகாரிகள் அடிக்கடி சோதனைசெய்து சரக்குப் போக்குவரத்துக்குத் தடையாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்துவிடக் கூடாது. லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் சரக்கு மின்வழி ரசீது முறையின் முக்கியத்துவம், அதைக் கையாளும் விதம் போன்றவற்றை அதிகாரிகள் கற்றுத்தர வேண்டும்.

ஏற்கெனவே சோதனைச் சாவடிகள் காரணமாக சரக்குப் போக்குவரத்து தேவையற்ற தாமதத்துக்கும் அலைக்கழிப்புக்கும் ஆளாகிவந்தது. அந்தச் சிக்கல் தொடரக் கூடாது. சரக்குகளை வாங்குவோரும் விற்போரும் அளிக்கும் கணக்குகள் சரிபார்ப்பின்போது பொருத்தமாக இருப்பது அவசியம். பதிவுசெய்துகொள்ளாத சிறு விநியோகஸ்தவர்களுக்காகப் பெரிய தொழில் நிறுவனங்களே வரியையும் செலுத்துவது வரும் ஜூன் இறுதி முதல் நடைமுறைக்கு வந்துவிடும். எனவே சரக்கு மின்வழி ரசீது நடைமுறை சீராகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை அனைத்துத் தரப்பினரும் உறுதிசெய்ய வேண்டும்!

SCROLL FOR NEXT