ஒரு அரசாங்கத்தின் செயலாளர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் மீதே தாக்குதல் நடத்துவது எனும் கலாச்சாரத்தில் அரசியல்வாதிகள் இறங்குவது அடாவடியானது. அதிகாரி களுக்கே இந்நிலை என்றால், சாமானிய மக்களிடம் இவர்கள் கை எவ்வளவு நீளும்?
சில வாரங்களுக்கு முன் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி உதவியாளர் கார்த்திகேயன் பாண்டியனின் இல்லத்தின் மீது, பாஜகவின் இளைஞர் பிரிவினர் (பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா) தாக்குதல் நடத்தினர். தலைநகர் புவனேஷ்வரில் உள்ள அவரது இல்லத்துக்கு பிப்ரவரி 10 அன்று வந்த சுமார் 30 பி.ஜே.ஒய்.எம். தொண்டர்கள், அங்கிருந்த இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், அவரது வீட்டுக்குள் பசுவின் சாணத்தை எறிந்து, அராஜகத்தில் ஈடுபட்டனர். ‘ஆளும் பிஜு ஜனதா தளக் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்’ என்பதும் ‘முதல்வர்போலச் செயல்படுகிறார்’ என்பதும் பாண்டியன் மீது அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டின் மேலூர் வெள்ளையாம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் முதல்வர் நவீன் பட் நாயக்கின் சொந்த மாவட்டமான கஞ்சத்தில் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி, தேசிய அளவில் விருது பெற்றவர். அவருடைய நேர்மை, நிர்வாகத் திறமையால் கவரப்பட்ட முதல்வர் பட்நாயக், அவரைத் தன்னுடைய தனிச் செயலராக நியமித்தார்.
ஒடிஷா பாஜக தலைவர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும் வைஜயந்த் பாண்டா, கடந்த ஓராண்டாகவே பாண்டியனைக் கடுமையாக விமர்சித்துவந்தார். இதன் தொடர்ச்சியாகவே இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. சம்பவத்தின் தொடர்ச்சியாக முதல்வர் நவீன் பட்நாயக் கைச் சந்தித்த அதிகாரிகள் தங்களுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கேட்டுக்கொண்டனர்.
ஒடிஷா சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள் தலைநகர் டெல்லியில் அடுத்த அடாவடி நடந்திருக்கிறது. இங்கே அடாவடியில் ஈடுபட்டிருப் பவர்கள் ஆம்ஆத்மி கட்சியினர். முக்கியப் பிரச்சினை தொடர்பான அவசர ஆலோசனைக்கு வருமாறு முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்துக்கு வரவழைக்கப்பட்ட டெல்லி தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை ஆஆக சட்ட மன்ற உறுப்பினர்கள் அமானதுல்லாகான், பிரகாஷ் ஜார்வால் ஆகியோர் தாக்கியிருக் கின்றனர். தேசிய அளவில் இதுவும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக் கிறது. இரு சம்பவங்களையுமே சம்பந்தப்பட்ட கட்சிகள் கண்டிக்கவில்லை என்பதோடு, சப்பைக் கட்டவும் செய்கின்றன என்பதுதான் மோசத்திலும் மோசம்.
அதிகாரிகள் மீதான தாக்குதல் என்பது ஒருவகையில் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்துக்கும் விடுக்கப்படும் மிரட்டல். ஆபத்தான இந்தப் போக்கு முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைச் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பவிடக் கூடாது என்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவோ, ஆஆகவோ சில்லறை அமைப்புகள் அல்ல. வெவ்வேறு இடங்களில் ஆட்சியிலும் இருக்கும் அவை தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்!