தலையங்கம்

திறனறித் தேர்வில் இத்தனை குழப்பம் ஏன்?

செய்திப்பிரிவு

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப்பணி தேர்வுகளை எழுதும் இளைஞர்கள், திறனறித் தேர்வை உடனே ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிப் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகளும் முடங்கின.

இந்தத் தேர்வு முறையில், இந்தி மற்றும் பிற மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலத்துக்கும் அறிவியல் - தொழில்நுட்பப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

லட்சக் கணக்கானவர்களை வடிகட்டும் விதத்தில்தான் தேர்வுகள் இருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம், திறனறித் தேர்வு என்பது கல்வியில் அதிகம் முன்னேற்றம் அடையாத மாநிலங்களிலும் கிராமங்களிலும் படித்த மாணவர்களுக்கு எளிதாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை.

போராட்டங்களையடுத்து, “திறனறித் தேர்வில், ஆங்கில மொழித்திறன் வினாவுக்கான மதிப்பெண் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது” என்று மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால், இந்த முடிவைப் பொறியியல் - தொழில்நுட்ப மாணவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

திறனறித் தேர்வுகளில் ஆங்கில மொழித்திறனுக்கான மதிப்பெண் 20 மட்டுமே. இது மொத்த மதிப்பெண்களில் 5%தான் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஆங்கிலத் தேர்வு கடினமானதாக இருக்கிறது. திறனறியும் தேர்வு பெரும்பாலானவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. அது நிர்வாகத் திறனைச் சோதிப்பதாக இல்லாமல், மேலாண்மைத் திறனைச் சோதிப்பதாக இருக்கிறது. அதற்கான பாடமோ பயிற்சியோ தங்களுக்குக் கல்லூரியில் அளிக்கப்படவில்லை என்று மாணவர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

முதன்மைத் தேர்வுகள் தமிழில் நடத்தப்படுவதைப் போல முதல்நிலைத் தேர்வையும் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நியாயமானதே. நாடு முழுவதும் பெரும்பாலான மாணவர்களுக்குத் தரமான கல்வி இல்லை; ஆங்கிலவழிக் கல்விமீதான மோகம் அதிகரித்துவந்தாலும் அதிலும் பெரும்பாலானவர்கள் பின்தங்கித்தான் இருக்கின்றனர்.

இந்நாட்டில், தரமான ஆங்கிலமும் தரமான கல்வியும் வசதி படைத்தோருக்கே கிடைக்கிறது; இந்நாட்டின் ஆகப் பெரும்பான்மை யான மாணவர்கள் மோசமான கல்விக்கூடங்களில் இருக்கின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் படிக்கும்போதெல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் அரசு, தன்னிடம் ஆட்சிப் பணி என்று வரும்போது மட்டும், அவர்களிடம் உச்சகட்ட தரத்திலான தேர்வு முறையை நாங்கள் முன்வைப்போம் என்று சொல்வது நியாயம் அற்றது. பெரும்பாலான சமூகங்களைப் புறக்கணித்துவிட்டு, அவர்களைக் கட்டிமேய்க்க வசதிமிக்கவர்களை மட்டுமே அனுமதிப்பதாகிவிடும்.

திறனறித் தேர்வு அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சமவாய்ப்பை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்; ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுகளை, அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 22 மொழிகளிலும் நடத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை அரசு விரைந்து பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

SCROLL FOR NEXT